திருச்சி:
திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய் நாளை (ஏப்.2) வேட்புமனு தாக்கல் செய்கிறார். இதற்கான ஏற்பாடுகளை தவெக மூத்த தலைவர் செங்கோட்டையன் செய்து வருகிறார்.
சட்டப்பேரவைத் தேர்தலில் சென்னை பெரம்பூர் தொகுதியிலும் திருச்சி கிழக்கு தொகுதியிலும் தவெக தலைவர் விஜய் போட்டியிடுகிறார்.
ஏற்கெனவே பெரம்பூரில் விஜய் வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில், திருச்சி கிழக்கு தொகுதியி்ல் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக நாளை (ஏப்.2) திருச்சி வருகிறார்.
அவரது வருகையையொட்டி உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும், பிரச்சாரத்துக்கு அனுமதி கேட்டும் தவெக நிர்வாகி செங்கோட்டையன் நேற்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினியை சந்தித்து மனு அளித்தார்.
தொடர்ந்து திருச்சியில் முகாமிட்டுள்ள செங்கோட்டையன், விஜய்யின் பயணத் திட்டம் குறித்து நிர்வாகிகளிடம் ஆலோசித்து வருகிறார்.
இதுகுறித்து தவெக மாநில நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
நாளை நண்பகல் 12 மணியளவில் தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையத்துக்குவருகை தரும் விஜய், 12.30 மணிக்கு திருச்சி பாலக்கரை கால்நடை மருத்துவமனை அருகே உள்ள மாநகராட்சி 2-வது மண்டல அலுவலகத்தில் மாநகராட்சி உதவி ஆணையரும், தேர்தல் நடத்தும் அலுவலருமான முத்து முருகேசபாண்டியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார்.
அங்கிருந்து ஊர்வலமாக வந்து மரக்கடை எம்ஜிஆர் சிலை முன்பு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.
தொடர்ந்து இ.பி.ரோடு, அரியமங்கலம் பால்பண்ணை, கே.கே.நகர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் செய்யவும், இப்பகுதியில் ஊர்வலமாகச் சென்று திருச்சி விமான நிலையத்துக்கு செல்லவும் காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இதேபோல் தேர்தல் ஆணையத்திடமும் ஆன்லைன் மூலம் முறைப்படி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.
இதுகுறித்து திருச்சி மாநகர காவல்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள் படி தவெக தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு எவ்வித கட்டுப்பாடும் இல்லை.
அவர் மரக்கடை எம்ஜிஆர் சிலை பகுதியில் மட்டும் தேர்தல் பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வேறு எங்கும் பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை. அதேபோல அவர் ரோடுஷோ செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது’’ என்றனர்.