”மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் காங்கிரசுக்கு ஓட்டு போட வேண்டும்” – புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி….

புதுச்சேரி;
தமிழகம், புதுவைக்கான சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கான முன் ஏற்பாடுகளை அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன. எந்தெந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு, வேட்பாளர் யார்? என்ற ஆலோசனையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக உள்ளன.

அதேபோல் முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் புதிய வேட்பாளர்கள் மக்களை சந்திக்க தொடங்கி விட்டனர். கட்சி தாவல் படலங்களும் அரங்கேற தொடங்கியுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி இழந்த செல்வாக்கை பெற்று புதுவை காங்கிரசின் கோட்டை என்பதை நிலை நாட்ட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளனர்.

இதனால் மற்ற கட்சிகளை விட ஒரு படி மேலே சென்று தேர்தல் பிரசாரத்தையே தொடங்கியுள்ளனர். புதுவை நெல்லித்தோப்பு தொகுதி காங்கிரஸ் கட்சி சார்பில் இந்திய அரசியலமைப்பை காப்போம் பிரசார பொதுகூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.

கூட்டத்தில் பேசிய முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிம்மதியாக இருக்க வேண்டும் என்றால் காங்கிரசுக்கு ஓட்டு போடுங்கள் என வாக்கு சேகரிக்கும் பணியை தொடங்கினார். அவர் மேலும் பேசியதாவது:-


ரங்கசாமி ஆட்சியில் என்ன செய்துள்ளார்? கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி னாரா? தேர்தல் தினத்தில் கொடுக்கும் பணத்தை வைத்து முடிவெடுத்தால் உங்கள் வாழ்க்கை இருண்டு விடும். யாருக்கு ஓட்டு போட்டால் தொகுதி வளர்ச்சியடையும் என சிந்திக்க வேண்டும்.

தொகுதியில் எந்த பிரச்சனைக்கும் எங்களை அணுகலாம். வரும் தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களியுங்கள். மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் காங்கிரசுக்கு ஓட்டு போட வேண்டும். உங்களுக்கு வேண்டியதை செய்து தருவோம். இவ்வாறு நாராயணசாமி பேசினார்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அனந்தராமன், கார்த்திகேயன், சீனியர் துணைத்தலைவர் தேவதாஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *