சென்னை:
வண்ணாரப்பேட்டையில் வாக்காளர்களுக்கு ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம் செய்ததாக திமுகவைச் சேர்ந்த 2 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
வண்ணாரப்பேட்டை வீட்டு வசதி வாரியக் குடியிருப்பு பகுதியில் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருள்கள் விநியோகம் செய்யப்படுவதாக தகவல் கிடைத்த நிலையில், போலீஸாரும், பறக்கும் படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் 2 பேர், அங்குள்ள வீடுகளுக்குள் சென்று வருவது தெரிந்தது.
இதையடுத்து போலீஸார், அவர்களைப் பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, ரூ.8 ஆயிரம் கூப்பன்கள் இருப்பது தெரிந்தது.
அதை போலீஸார் உடனடியாக பறிமுதல் செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
பிடிபட்ட இருவரும் திமுகவைச் சேர்ந்தவர்கள் என்பதும், அந்த பகுதியைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு ரூ.8 ஆயிரம் இல்லத்தரசி கூப்பன் என்ற இலவச கூப்பன் மாதிரிகளை விநியோகம் செய்ததும் தெரியவந்தது.
இது தொடர்பாக வண்ணாரப்பேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.