சென்னை:
சென்னை மருத்துவ கல்லுாரி முன்னாள் மாணவர்களுக்கு இணையதளத்தை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார்.
சென்னை மருத்துவ கல்லுாரி, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையின் 190-வது பட்டமளிப்பு விழா, கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவில், சென்னை மருத்துவ கல்லுாரியின் முன்னாள் மாணவர்களுக்காக https://www.alumnimmc.com/ என்ற இணையதளத்தை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்து, முன்னாள் மாணவர் என்ற அடிப்படையில் தனது பெயரையும் பதிவு செய்தார்.
சுகாதாரத் துறை செயலர் தாரேஸ் அகமது, கல்லூரி முதல்வர் சாந்தாராமன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர்.
விழாவில், அமைச்சர் அருண்ராஜ் பேசியதாவது: நமது பாதையை தேர்ந்தெடுத்து பயணித்தால், நிச்சயம் வெற்றி பெற முடியும்.
எனது சிந்தனைப்படி நான் வெற்றி பெற்றுள்ளேன். மக்களுக்கு சேவை செய்வேன். சொல்லிவிட்டு செய்வதை விட, செய்து விட்டு சொல்வேன்.
மருத்துவ மாணவர்களுக்கான விளையாட்டு கட்டமைப்பு மேம்படுத்தப்படும். புத்தகம் மட்டும் வாழ்க்கை இல்லை.
வாழ்க்கையில் எல்லாமே இருக்க வேண்டும். எனவே புத்தகம், விளையாட்டு என இரண்டும் வாழ்க்கையின் அங்கமாக இருக்க வேண்டும். அதேநேரம், சமூகவலை தளங்களில் முடங்கி விடக்கூடாது.
மருத்துவ புத்தகத்தை போல், தினசரி செய்தித்தாள்கள், மற்ற புத்தகங்களையும் படியுங்கள். இதுவரை பாதுகாப்பான சூழலில் இருந்து விட்டீர்கள்.
இனிதான் உங்களுக்கு சவால்கள் இருக்கும். நம்பிக்கையுடன் இருங்கள் நல்லது நடக்கும். நாம் நினைத்தால் சாதிக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.