கோவை:
தமிழக சட்டசபை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் கோவை மாவட்டம் வருகிற 18-ந் தேதி(சனிக்கிழமை) மாபெரும் அரசியல் போர்க்களமாக மாறவுள்ளது.
நாட்டின் முக்கிய தலைவர்களான பிரதமர் நரேந்திர மோடியும், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஒரே நாளில் கோவை மாவட்டத்தில் பிரசாரம் செய்ய இருப்பது தான் தேர்தல் களத்தை உச்சகட்ட பரபரப்புக்கு உள்ளாக்கியுள்ளது.
கோவை-அவினாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் நாளை மறுநாள் மாலை 5 மணிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரமாண்ட தேர்தல் பொதுக்கூட்டம் நடக்கிறது.
இந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் பலத்தை நிரூபிக்கும் வகையில் அமைய உள்ள இந்தக் கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் வடக்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், அவினாசி தொகுதியில் போட்டியிடும் மத்திய மந்திரி எல்.முருகன் உள்ளிட்ட 11 தொகுதி வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி ஆதரவு திரட்டி உரையாற்றுகிறார்.
இதனையொட்டி கோவை கொடிசியா மைதானத்தில் பிரமாண்ட மேடை அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
பிரதமர் மோடி பிரசாரம் செய்யும் அதே நாளில் இரவு 7 மணியளவில் மேட்டுப்பாளையத்தில் தி.மு.க சார்பில் நடக்கும் பிரசார பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும் என்ற முழக்கத்துடன் நடைபெறும் இந்த கூட்டத்தில் தி.மு.க தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கோவை தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், ஊட்டி, குன்னூர், கூடலூர் தொகுதி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அவர் வாக்கு சேகரிக்கிறார்.
ஒரே நாளில் பிரதமரும், முதலமைச்சரும் ஒரே மாவட்டத்தில் முகாமிடுவது கோவை மாவட்டத்தை தமிழக தேர்தலின் மையப்புள்ளியாக மாற்றியுள்ளது.
ஒருபுறம் மத்தியில் ஆளும் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியின் செல்வாக்கை நிரூபிக்கும் விதமாக பிரதமர் பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், மறுபுறம் தி.முக. ஆட்சியின் சாதனைகளை முன்னிறுத்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிக்க தயாராகி வருகிறார்.