காவேரி கூக்குரல் சார்பில் ஈரோட்டில் 7,50,000 மரக்கன்றுகள் நட திட்டம் – அமைச்சர் எஸ். முத்துசாமி மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்!!

ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்தாண்டு ஈரோடு மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் 7,50,000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டு உள்ளது.

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி இன்று (03-06-2024) நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் மாண்புமிகு வீட்டுவசதி துறை மற்றும் மதுவிலக்கு ஆய தீர்வை துறை அமைச்சர் திரு. எஸ். முத்துசாமி மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கி இந்நிகழ்வை தொடங்கி வைத்தார்.

சுற்றுச்சூழலுடன் சேர்த்து விவசாயிகளின் பொருளாதாரத்தையும் மேம்படுத்தும் விதமாக மரம் சார்ந்த விவசாய முறையை ஊக்குவிக்கும் பணியில் காவேரி கூக்குரல் இயக்கம் மிக தீவிரமாக களப்பணியாற்றி வருகிறது.

தமிழ்நாட்டில் இவ்வியக்கம் மூலம் இந்தாண்டு (24-25 நிதியாண்டில்) 1.21 கோடி மரங்கள் விவசாய நிலங்களில் நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மாவட்டம் தோறும் இதன் தொடக்க விழாக்கள் தொடர்ந்து நடைப்பெற்று வருகின்றன.

அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் நடைப்பெற்ற இதன் தொடக்க விழாவில் அமைச்சர் முத்துசாமி அவர்கள் பங்கேற்று முதல் மரக்கன்றை விவசாயிகளுக்கு வழங்கி இந்நிகழ்வை துவங்கி வைத்தார்.

இவரோடு திமுக நாடாளுமன்ற வேட்பாளர் திரு. கே.இ. பிரகாஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இவ்வியக்கம் மூலம் கடந்தாண்டு ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 6,25,959மரங்களும், தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 10 லட்சம் மரங்களும் விவசாய நிலங்களில் நடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஈஷா 2002-ம் ஆண்டு முதல் சுற்றுச்சூழல் மேம்பாடு மற்றும் மரம் நடும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. காவேரி நதியை மீட்டெடுக்க காவேரி கூக்குரல் இயக்கம் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இவ்வியக்கம் தமிழகம் மற்றும் கர்நாடக மாநில காவேரி வடிநிலப் பகுதிகளில் பசுமை பரப்பை அதிகரிக்க விவசாய நிலங்களில் மரம் சார்ந்த விவசாயத்தை முன்னெடுக்கிறது. இதன் மூலம் மண்ணின் தரமும், அதன் நீர்பிடிப்பு திறனும் மேம்படுவதோடு, விவசாயிகளுக்கு பொருளாதார நலன்களும் கிடைக்கின்றது.

மேலும் இவ்வியக்கம் விவசாயிகள் மரம் நடுவதற்கும், தொடர்ந்த பராமரிப்பிற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்கி வருகிறது. மண்ணுக்கேற்ற மரங்கள் தேர்வு, நீர் மேலாண்மை, களை மேலாண்மை, ஊடுபயிர் சாகுபடி போன்ற ஆலோசனைகளை காவேரி கூக்குரல் பணியாளர்கள் விவசாய நிலங்களுக்கு சென்று வழங்கி வருகின்றனர்.

விவசாயிள் கூடுதல் தகவலுக்கும், மரக்கன்றுகள் தேவைக்கும் 80009 80009 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *