கோவை
கருப்புக் கொடி போராட்டம் என்ற பெயரில் ஸ்டாலின் அரசியல் நாடகம் நடத்துகிறார் என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
கோவை வடக்கு, கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையில் நேற்று நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதாவது:
காற்றில் பரவும் கரோனா வைரஸை விட கொடுமையானது கோவை தெற்கு தொகுதியில் இன்றைக்கு பரவி உள்ளது. கரோனா வைரஸூக்கு மருந்து உள்ளது. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு (செந்தில் பாலாஜி) தோல்வியைத் தர வேண்டும்.
5 கட்சிகள் மாறிய அரசியல் வியாபாரியை மக்கள் நம்ப வேண்டாம். மக்களை நம்பி அதிமுக நிற்கிறது. செந்தில் பாலாஜி ஏன் கரூரில் நிற்கவில்லை.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கரூரை சுரண்டி முடித்துவிட்டு, தற்போது தொழில் மாநகரான கோவைக்கு வந்துள்ளார்.
கருணாநிதி இருக்கும்போது செந்தில்பாலாஜி சட்டப்பேரவையில் என்னென்ன பேசினார் என்பது இன்னமும் உள்ளது. அரக்கனை விட கொடியவர் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக 18 சுயேச்சை பினாமிகள் போட்டியிடுகிறார்கள். மக்கள் தான் நியாயமான தீர்ப்பை வழங்க வேண்டும்.
தீயசக்தி திமுகவை தமிழகத்தில் வேரோடு அழிக்க வேண்டும். தற்போது தமிழ்நாட்டுக்கும், டெல்லிக்கும் பிரச்சினை என ஸ்டாலின் பேசுகிறார்.
ஆட்சி மாறும்போது காட்சி மாறும். இன்றைக்கு ஆளுங்கட்சிக்கு துணையாக இருக்கும் அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும். அதிகாரிகள் உரிய முறையில் வேலை செய்ய வேண்டும்.
தொகுதி மறுவரையறைக்கு எதிராக திமுக கருப்புக்கொடி போராட்டத்தை கையில் எடுத்துள்ளது. ஆனால் கோவையில் எங்கும் நான் கருப்புக் கொடிகளை பார்க்கவில்லை.
தொகுதி மறுவரையறையால் எந்த விதத்திலும் தமிழகம் பாதிக்காது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு தொகுதி மறுவரையறையை எவ்வித பாதிப்பும் இன்றி எல்லா மாநிலங்களுக்கும் பாரபட்சமில்லாமல் அருமையாக செயல்படுத்தும்.
இதை முன்கூட்டியே தெரிந்து கொண்டு மு.க.ஸ்டாலின் இரட்டை நிலைப்பாட்டுடன் போராட்டத்தை செய்கிறார்.
தொகுதி மறுவரையை மத்திய அரசு வெற்றிகரமாக முடித்தபின், தான் கருப்புக்கொடி ஏற்றிய போராட்டத்தின் காரணமாகவே, பாஜக தலைமையிலான மத்திய அரசு அடங்கியதாக தந்திரமாக காட்டிக்கொள்ளவே போராட்டத்தை ஸ்டாலின் முன்னெடுத்துள்ளார்.
மத்திய அரசு மிகத் தெளிவாக இருக்கிறது. நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடால் மத்திய அரசுக்கு பெண்கள் மத்தியில் நல்ல பெயர் கிடைத்துவிடும் என்பதை தடுக்கவே ஸ்டாலின் கருப்புக் கொடி போராட்டம் என்ற பெயரில் அரசியல் நாடகம் நடத்துகிறார்.
மத்திய அமைச்சரவையில் திமுக இடம்பெற்றபோது எந்த திட்டங்களும் தரவில்லை.
இன்றைக்கு தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அதிமுக ஆட்சி அமைந்த முதல் 3 மாதத்தில் முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த 5 ஆண்டில் கோவைக்கு என்ன திட்டங்களை திமுக செய்தது என பட்டியலிட்டு சொல்ல முடியுமா? இவ்வாறு அவர் பேசினார்.