தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் 4,023 வேட்பாளர்களின் பெயர், வண்ண புகைப்படம் மற்றும் சின்னங்களை பொருத்தும் பணி தொடக்கம்!!

சென்னை:
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்களில் 4,023 வேட்பாளர்களின் பெயர், வண்ண புகைப்படம் மற்றும் சின்னங்களை பொருத்தும் பணி நேற்று தொடங்கியது.

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் வேட்பு மனு ஏற்கப்பட்ட 4,023 வேட்பாளர்கள் தற்போது களத்தில் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இத்தேர்தலில் தமிழகத்தில் உள்ள 75 ஆயிரத்து 64 வாக்குச்சாவடிகளில் 5.73 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர்.

இந்த வாக்குச்சாவடிகளுக்கு தேவையான சுமார் 75 ஆயிரம் கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்கள் மற்றும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.

இந்த இயந்திரங்கள் ஏற்கெனவே அந்தந்த தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், வண்ண புகைப்படம், சின்னம், ஆகியவற்றை பொருத்தும் பணி அந்தந்த தேர்தல் நடத்தும் அலுவலர்கள் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் நேற்று தொடங்கியது.

சென்னையில் இப்பணிகளை மாவட்ட தேர்தல் அதிகாரி ஜெ.குமரகுருபரன் நேரில் ஆய்வு செய்தார்.

இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், பின்னர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் அந்தந்த தொகுதி பாதுகாப்பு அறைகளில் வைக்கப் பட்டன.

தேர்தலையொட்டி, நகர்ப்புறங்களில் வசிக்கும் வாக்காளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக, ஏப்.21 முதல் 23-ம் தேதி வரை 5,574 சிறப்பு பேருந்துகள் உள்பட 10,663 பேருந்துகள் இயக்க அரசு போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு செய்துள்ளன.

தேர்தலை அமைதியாக நடத்த, தமிழகம் முழுவதும் ஏப்.21, 22, 23 மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 4-ம் தேதி ஆகிய 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *