பழநி:
நடிகருக்காக விசில் அடிக்கலாம். ஆனால், நாட்டை தூக்கிக் கொடுக்க முடியாது என்று நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
பழநி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் என்.பாண்டி போட்டியிடுகிறார்.
இவரை ஆதரித்து, அக்கட்சியின் இளைஞர் அணி, மாணவர்கள் அணி ஒருங்கிணைத்து நடத்திய இளைஞர் கலை விழா நேற்று நடைபெற்றது.
அதில், நடிகர் பிரகாஷ்ராஜ் பங்கேற்று பேசியதாவது: தமிழகத்தில் நடக்கவிருக்கும் தேர்தல், திராவிட மாடல், அடிமை மாடல், சினிமா மாடல் ஆகிய 3 மாடலுக்குமான தேர்தல்.
திராவிட மாடல் கல்வி கொடுத்தது, மொழியைக் காப்பாற்றியது. இனம் மானத்தை காப்பாற்ற போராடிக் கொண்டிருக்கிறது.
தமிழகத்துக்கு துரோகம்: அடிமை மாடல், நம் தன்மானத்தை, சுய மரியாதையை தூக்கிச் சென்று மோடி காலடியில் வைக்கும்.
தொகுதி மறுவரையறை மசோதா அமலுக்கு வந்தால் தென்னிந்தியாவின் 50 ஆண்டுகால அரசியல் மாறிவிடும்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப் போவதாக கூறுகின்றனர்.
இந்த மசோதாவால் தமிழகத்துக்கு துரோகம் நடக்கிறது. அதற்கு இந்த அடிமை மாடல் ஆதரவு கொடுத்து வருகிறது.
ஒற்றுமைக்கும், பிரிவினைக்கும்…: திருப்பரங்குன்றத்தை வைத்து மதுரையை, மணிப்பூராக மாற்ற முயற்சிக்கின்றனர். மதுரையை அடுத்து பழநிதான்.
சினிமா மாடலில் ஒரு பாடலில் மருத்துவர், பொறியாளர், முதல்வராகி விடலாம். அந்த நடிகர் (விஜய்) மக்களுக்கோ, மொழிக்கோ, தன்மானத்துக்கோ பிரச்சினை வந்தபோது வந்து நின்றிருக்கிறாரா?
நடிகருக்காக விசில் அடிக்கலாம். ஆனால், நாட்டை தூக்கிக் கொடுக்க முடியாது. நமக்கு எந்த மாடல் வேண்டும் என்று முடிவு செய்து கொள்ளுங்கள்.
இந்த தேர்தல் திமுக, அதிமுக மற்றும் திமுக, தவெகவுக்கான தேர்தல் இல்லை. ஒற்றுமைக்கும், பிரிவினைக்கும் நடக்கும் தேர்தல். இவ்வாறு அவர் பேசினார்.