மணப்பாறை தொகுதியில் போட்டியிடும் மமக வேட்பாளருக்கு தொடர்ந்து கிளம்பும் எதிர்ப்பை சமாளிக்க களமிறங்கிய அமைச்சர்கள்!!

திருச்சி:
மணப்பாறை தொகுதியில் போட்டியிடும் மமக வேட்பாளருக்கு தொடர்ந்து கிளம்பும் எதிர்ப்பை சமாளிக்க அமைச்சர்கள் களம் இறங்கியுள்ளனர்.

மணப்பாறை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் மமக வேட்பாளராக, தற்போதைய எம்எல்ஏவான அப்துல் சமது மீண்டும் போட்டியிடுகிறார்.

இந்தத் தொகுதி தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கே ஒதுக்கப்படுவதால் உள்ளூர் திமுகவினர் அதிருப்தியில் இருந்தனர்.

மேலும், அப்துல் சமது வாக்கு கேட்டு செல்லும் இடங்களில் இதுவரை தங்கள் பகுதிக்கு எந்த வசதியும் செய்து தரவில்லை எனக் கூறி அவருக்கு பல இடங்களில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, உள்ளூர் திமுகவினர் பிரச்சாரம் செய்வதில் சுணக்கம் காட்டுவதாகவும், உள்ளூர் மக்களை போராட்டம் நடத்த சிலர் தூண்டுவதாகவும் மாவட்ட அமைச்சர்களான நேரு, அன்பில் மகேஸ் ஆகியோரிடம் அப்துல் சமது கூறியதாக தெரிகிறது.

இதையடுத்து கடந்த 14-ம் தேதி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழியும், நேற்று அமைச்சர் கே.என்.நேருவும் மணப்பாறை தொகுதியில் பிரச்சாரம் செய்ததுடன், வேட்பாளருக்கு உரிய ஒத்துழைப்பு அளிக்கும்படி திமுக நிர்வாகிகளை கேட்டுக் கொண்டனர்.

மேலும், பிரச்சாரத்தின்போது அமைச்சர் நேரு பேசுகையில், ‘‘கடந்தமுறை போலவே இந்த முறையும் அனைவரும் ஒற்றுமையாக இருந்து அப்துல் சமதுவை வெற்றி பெற வைக்க வேண்டும்.

மாவட்ட அவைத்தலைவர் பண்ணப்பட்டி கோவிந்தராஜன், ஒன்றியச் செயலாளர் ராமசாமி, முன்னாள் மாவட்டக் கவுன்சிலர் பாலசுப்பிரமணி உள்ளிட்டோருக்கு இந்த முறை வாய்ப்பு இல்லாவிட்டாலும், வரும் காலங்களில் இவர்களுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது’’ என உள்ளூர் திமுகவினரை சமாதானம் செய்யும் வகையில் பேசினார்.

இதுகுறித்து திமுகவினர் கூறுகையில், ‘‘திமுகவினர் ஏதாவது கோரிக்கைகளை முன்வைத்தால், அப்துல் சமது செய்து தர முன்வந்தாலும், அவரது ஆதரவாளர்கள் அதற்கு தடைபோட்டனர்.

மேலும், புத்தாநத்தம் ஊராட்சியை பிரித்த விவகாரத்தில் தலையிட்ட அப்துல் சமதுவின் ஆதரவாளர்கள் மீதும் ஒரு தரப்பினருக்கு வருத்தம் உள்ளது. அதுதான் அவருக்கு எதிராக மக்கள் போராட்டமாக வெடித்தது.

இருந்தாலும் அப்துல் சமதுவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என அமைச்சர்கள் நேரு, மகேஸ் கட்டளையிட்டுள்ளனர். அதனால் அவரை வெற்றி பெற வைப்போம்’’ என்றனர்.

இதுகுறித்து தமுமுக ஐடி பிரிவு மாநிலச் செயலாளர் அல்தாஃப் கூறியது:

ஆரம்பத்தில் திமுகவினர் சிலர் ஒத்துழைப்பு தரவில்லை. தற்போது அமைச்சர்கள் நேரு, மகேஸ் இருவரும் உள்ளூர் திமுகவினரை சமாதானம் செய்துள்ளனர்.

இதனால் திமுகவினர் அனைவரும் தற்போது தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *