சென்னை:
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க பொதுக்குழு ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது.
அதில், வருவாய் பகிர்வு முறையில் மட்டுமே படங்களைத் தயாரிப்பது என்றும் இந்த விஷயத்தை அனைவரின் கவனத்துக்குக் கொண்டு செல்லும் வகையில் மே 2-ம் தேதி அடையாள வேலை நிறுத்தம் செய்யவும் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
இந்நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மே 2-ம் தேதி வேலை நிறுத்தம் செய்ய தீர்மானம் நிறைவேற்றி இருப்பது பேரதிர்ச்சியையும் வேதனையும் அளிக்கிறது.
தயாரிப்பாளர்களின் பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண உறுதுணையாக நடிகர் சங்கம் இருந்து வரும் நிலையில், தன்னிச்சை யாக இந்த வேலை நிறுத்த அறிவிப்பை வெளியிட்டது வருத்தத்துக்குரியது. வேலை நிறுத்தம் என்னும் அணுகு முறையை நடிகர் சங்கம் என்றுமே ஆதரிக்காது.
நடிகர்கள், வருமான பகிர்வு முறையில் பணியாற்றுவது தொடர்பாக தங்கள் தரப்பிலிருந்து எங்களுக்கு எந்தவித கடிதமோ, மின்னஞ்சலோ அனுப்பப்படவில்லை. அது தொடர்பாக எந்தவித பேச்சுவார்த்தையும் நிகழ்த்த அழைக்கவில்லை.
இதுவரை எங்கள் தரப்பிலிருந்து அளிக்கப்பட்ட புகார் பட்டியலில் உள்ள எந்த புகாருக்கும் எவ்வித தீர்வும் வழங்கப்படாமல் நீண்டு வருவதையும் தாங்கள் மறுக்க இயலாது.
ஆகவே, இந்த தன்னிச்சையான வேலை நிறுத்த அறிவிப்பைத் திரும்பப் பெறுமாரும், முன்னரே ஒப்புக்கொண்டபடி, தேர்தல் முடிவுகள், மே 4ம் தேதி வெளியான பிறகு, பொருத்தமான தேதியில் இரு அமைப்பின் பிரதிநிதிகளும் சந்தித்து அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து ஆலோசித்து தீர்மானிக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.