தமிழக பாஜகவின் மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி, பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கம்!!

சென்னை:
தமிழக பாஜகவின் மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாகக் கூறி, பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் மாதம், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய்யை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணையுமாறு ஏ.என்.எஸ்.பிரசாத் அழைப்பு விடுத்திருந்தார்.

இது கட்சியின் நிலைப்பாட்டுக்கு எதிரானது எனக் கருதப்பட்டதால், அவர் அப்போது தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

பின்னர், கடந்த ஏப்ரல் மாதம் அந்த நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு, அவர் மீண்டும் கட்சிப் பொறுப்பில் செயல்பட அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஏ.என்.எஸ்.பிரசாத் மீண்டும் ஒரு சர்ச்சைக்குரிய அறிக்கையை வெளியிட்டார்.

அதில், ‘தமிழகத்தில் தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க அனைத்து கட்சிகளும் ஆதரவு தர வேண்டும், குறிப்பாக அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அவருக்கு ஆதரவு அளிக்க வேண்டும்” என்று பாஜக தேசியத் தலைவர்களுக்குக் கோரிக்கை விடுத்திருந்தார்.

கட்சியின் மேலிட அனுமதி இன்றி, தன்னிச்சையாக இத்தகைய கருத்தை வெளியிட்டது கட்சி விதிகளுக்கு எதிரானது என பாஜக தலைமை கருதியது.

இதனால், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக மீண்டும் கட்சியின் பொறுப்பில் இருந்து ஏ.என்.எஸ்.பிரசாத் நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள உத்தரவில், “பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் கட்சியின் கட்டுப்பாட்டை மீறியதாலும், கட்சிக்குக் களங்கம் விளைவிக்கும் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாலும், அவர் வகித்து வந்த பொறுப்பிலிருந்து உடனடியாக நீக்கப்படுகிறார்,” என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், தன் மீதான நடவடிக்கை குறித்து விளக்கம் அளித்துள்ள ஏ.என்.எஸ்.பிரசாத், “பாஜகவின் நற்பெயருக்கு எவ்விதக் களங்கமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்ற தூய நோக்கத்திலேயே நான் அந்த அறிக்கையை வெளியிட்டேன். இதில் எனக்கு வேறு எந்த உள்நோக்கமும் இல்லை.

கடந்த முறையைப் போலவே, இந்த முறையும் என்னிடம் எவ்வித விளக்கமும் கேட்காமலேயே கட்சித் தலைமை என்னை பொறுப்பிலிருந்து விடுவித்திருப்பது மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது.

இருப்பினும், கட்சியின் முடிவுக்குக் கட்டுப்பட்டு, எப்போதும் போல ஒரு சாதாரணத் தொண்டனாக கட்சிப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல், கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாகக் கூறி, மத்திய சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த மாநில செயற்குழு உறுப்பினர் நிஷா ராஜா என்பவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *