“ஆர்சிபி ஒரு சாம்பியன் அணி. ஆனால், அந்த அணி தன் அணிச் சேர்க்கையை அடிக்கடி மாற்றிக் கொண்டிருப்பது சரியல்ல” என்று வெங்கடேஷ் அய்யர் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக அன்று 40 பந்துகளில் 73 ரன்களை விளாசியதில் ஆர்சிபி அணி 222 ரன்களைக் குவித்து வெற்றிக்கு வித்திட்டார் ஆட்ட நாயகன் விருதையும் தட்டிச் சென்றார் வெங்கடேஷ் அய்யர்.
“சரியாகச் சொல்வதென்றால் இது எனது 2-வது (3-வது) ஆட்டம். இந்த இன்னிங்ஸில்தான் எனக்கு அதிக ஓவர்கள் பேட் செய்ய வாய்ப்புக் கிடைத்தது. அதுதான் ஆட்ட நாயகன் விருதையும் விட மகிழ்ச்சி அளிப்பதாகும். அதோடு 2 புள்ளிகள் பிளே ஆஃப் தகுதியும்” என்றார் வெங்கடேஷ் அய்யர்.
பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக இந்த இன்னிங்ஸில் அவர் 4-ம் நிலையில் இறங்கியதுதான் இந்தத் தொடரில் அவர் இறங்கும் டாப் நிலையாகும். 10 ஓவர்கள் மீதமிருந்தன.
அதை நன்றாகப் பயன்படுத்தி 8 பவுண்டரிகளையும் 4 சிக்சர்களையும் விளாசினார் வெங்கடேஷ் அய்யர். “ஆமாம், நான் விரக்தியடையவில்லை என்றோ அல்லது இந்த சீசனில் ஆர்சிபி அணிக்காக விளையாட விரும்பவில்லை என்றோ சொன்னால் அது பொய்யாகிவிடும்.
நான் உண்மையிலேயே களத்தில் இறங்கி விளையாட விரும்பினேன். ஏனென்றால், எங்களைப் போன்ற வீரர்களுக்கு ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்புதான் மிகவும் முக்கியமானது. நாங்கள் விளையாட விரும்புகிறோம், அதோடு நன்றாகச் செயல்பட விரும்புகிறோம்.
இந்த அணி சாம்பியன் அணி என்று புரியும் அளவுக்கு நான் இந்த அணியோடு நீண்ட பிணைப்புக் கொண்டுள்ளேன். ஆகவே அணிச் சேர்க்கையில் அடிக்கடி வெட்டுவதும் ஒட்டுவதும் செய்தால் அது நன்றாக இல்லை.
நான் பயிற்சியாளர்களிடம் எனக்கு வாய்ப்புக் கொடுங்கள், நான் சிறப்பாக ஆடுவென் என்று ஓபனாகவே கேட்டு விட்டேன். இப்போது வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன்.
என்னுடைய இந்த இன்னிங்ஸின் ஆரம்பத்தில் கொஞ்சம் சிரமப்பட்டேன், ஆனால் விராட் கோலியுடன் சேர்ந்து ஆடியது என் அதிர்ஷ்டம் தான்.
கோலி போன்ற லெஜண்ட்களின் அளப்பரிய விஷயம் என்னவெனில், அவர்களது கம்யூனிகேஷன் திறமைதான். அவருடன் ஆடியதில் இந்த விதத்தில் என் அதிர்ஷ்டம்.
முதலில் கொஞ்சம் திணறத்தான் செய்வேன் பிறகு பிட்சின் தன்மையைக் கணித்து விட்டால் பவுலிங்கை அடித்து நொறுக்குவேன்” என்று மனம் திறந்துள்ளார் வெங்கடேஷ் அய்யர்.