அதிமுக எம்எல்ஏக்கள் அளித்த மனுக்கள் தொடர்பான முறையான அறிவிப்பை நாளை அறிவிக்கிறேன் – சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்!!

சென்னை:
அதிமுக எம்எல்ஏக்கள் அளித்த மனுக்கள் தொடர்பான முறையான அறிவிப்பை நாளை காலை வெளியிடப் போவதாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவை அடுத்து அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணி, சி.வி. சண்முகம் – எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஒரு அணி என இரண்டு அணிகளாக உருவாகின.

சி.வி. சண்முகம் – எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஒரு அணி, நம்பிக்கை வாக்கெடுப்பில் விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவாக வாக்களித்தது.

இதையடுத்து, சி.வி. சண்முகம் – எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஒரு அணியினர் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதேபோல், சட்டமன்ற கொறடா, சட்டமன்றக் குழு தலைவர் தொடர்பாக சி.வி.சண்முகம் – எஸ்.பி. வேலுமணி அணி சபாநாயகரிடம் மனு ஒன்றை அளித்தது.

இந்நிலையில், இரு அணிகளும் இன்று ஒன்றுசேர்ந்துள்ளன. இதையடுத்து, இரு தரப்பும் சபாநாயகரைச் சந்தித்து ஏற்கனவே தாங்கள் அளித்த மனுக்களை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

இதையடுத்து, சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர், “அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏற்கனவே இரு வேறு குழுக்களாக பிரிந்து மனுக்களை அளித்திருந்தார்கள்.

நேற்று முன்தினம் 5 பேர் சேர்ந்து ஒரு மனு கொடுத்தார்கள். பிறகு, ஒருவர் ஒரு மனு கொடுத்தார்.

இன்றைக்கு, ஏற்கனவே அளிக்கப்பட்டவர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அவற்றை படித்து ஆய்வு செய்து முறையான அறிவிப்பை நாளை காலை வெளியிடுவேன்” என தெரிவித்தார்.

அதிமுகவில் பிரிந்தவர்கள் தற்போது இணைந்துள்ளார்களே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, “இது குறித்து நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும். எனக்கு அவர்கள் மனு கொடுத்திருக்கிறார்கள்.

அடுத்து அவர்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பதை நீங்கள் அவர்களிடம்தான் கேட்க வேண்டும்” என தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *