டெல்லி ;
தேர்தல் நன்கொடை பத்திரம் மூலம் பாஜகவுக்கு கிடைத்த தொகை, மிரட்டி பறிக்கப்பட்ட பணம் (ஹப்தா வசூலி) என காங்கிரஸ் குற்றம் சாட்டியதற்கு அமித் ஷா பதிலடி கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக தனியார் செய்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர் பேசுகையில்,
“ராகுல் காந்திக்கு ரூ.1,600 கோடி கிடைத்தது. அது எந்த ஹப்தா வசூலி என்பதை அவர் விளக்க வேண்டும். தேர்தல் பத்திரங்கள் வெளிப்படையான நன்கொடை என்று நாங்கள் கூறுகிறோம். ஆனால் அதை ‘ஹப்தா வசூலி’ என அவர் (ராகுல் காந்தி) சொன்னால், அதற்கான விவரங்களை அவர் வழங்க வேண்டும்.
எங்களுக்கு நிறைய நன்கொடைகள் கிடைத்ததாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. இது முற்றிலும் பொய்யானது. எங்களுக்கு ரூ.6,200 கோடி கிடைத்துள்ளது. அதே நேரத்தில் ராகுல் காந்தி தலைமையிலான ‘இந்தியா கூட்டணி’ ரூ.6,200 கோடிக்கும் அதிகமாகவே பெற்றுள்ளது. எங்களிடம் 303 இடங்கள் (எம்பி-க்கள்) இருந்தாலும், 17 மாநிலங்களில் எங்களுக்கு அரசாங்கங்கள் உள்ளன. ஆனால், இந்தியா கூட்டணி எத்தனை இடங்களைக் கொண்டுள்ளது?
தேர்தல் நன்கொடை பத்திரங்களை எதிர்க்கட்சி முகாம்கள் எதிர்த்தன. அவர்கள் பழைய ‘கட் மணி’ முறை மூலம் மீண்டும் அரசியலை ஆள விரும்புகிறார்கள். இவ்வாறு அமித் ஷா கூறினார்.