தமிழகம் எதிர்காலத்திற்காக காத்திருக்கவில்லை, அதை நாங்கள் கட்டமைக்கிறோம் – அமைச்சர் கீர்த்தனா!!

சென்னை:
தொழில்துறையில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் அரசின் கொள்கைகள் குறித்து தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா ரீல்ஸ் வெளியிட்டுள்ளார்.

இதற்கு ஒருபுறம் வரவேற்புகள் கிடைத்தாலும், மறுபுறம் விமர்சனங்களும் குவிந்து வருகின்றன.

தமிழக தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா வெளியிட்ட ரீல்ஸ் பதிவில், ‘தமிழகம் எதிர்காலத்திற்காக காத்திருக்கவில்லை, அதை நாங்கள் கட்டமைக்கிறோம்.

கோப்புகள் மற்றும் ஒப்புதல்களுக்காக நீண்ட காலம் காத்திருக்க வைக்கும் அரசை யாரும் விரும்புவதில்லை. அதனை சரிசெய்யவே முதல்வர் விஜய் என்னை நியமித்துள்ளார்.

நமது அரசு 21 நாட்களில் விரைவான அனுமதி மற்றும் ஒற்றைச் சாளர ஒப்புதல்களுக்கு உறுதியளிக்கிறது. பிரச்சினைகளை என்னிடமும், முதல்வரிடமும் நேரடியாக கொண்டு செல்லலாம் என்று உறுதியளிக்கிறோம்.

ஏஐ நகரங்கள் முதல் பசுமை ஹைட்ரஜன், மேம்பட்ட உற்பத்தி மற்றும் விண்வெளிப் பொருளாதாரம் என பல புதுமைகளை செயல்படுத்தும் ஒரு சூழலை எங்கள் அரசு உருவாக்குகிறது.

முதல்வர் ஜோசப் விஜய்யின் தொலைநோக்கு தலைமையின் கீழ், தமிழகத்தை இந்தியாவின் முதலீடு மற்றும் கண்டுபிடிப்புகளின் மையமாக மாற்ற உறுதிபூண்டுள்ளோம்.

எதிர்காலம் இங்கே உள்ளது. எனவே தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள்’ என அவர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் பிரச்சாரங்களில் ரீல்ஸ் மூலமாக கவனம் ஈர்த்த விருதை மகள் கீர்த்தனா, இப்போது தொழில் துறை அமைச்சரான பின்னரும் முதலீடுகளை ஈர்க்க அதே ரீல்ஸ் வழிமுறைகளை பயன்படுத்துவது சமூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

அனைத்து தரப்பையும் சென்று சேரும் வகையில், அமைச்சர் கீர்த்தனா ரீல்ஸ்களை வெளியிட்டுள்ளார் என ஒரு தரப்பு வரவேற்பு தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில், வெளிநாடு மற்றும் உள்நாட்டு தொழில் முதலீடுகளை ஈர்க்க ரீல்ஸில் அழைப்பு விடுப்பது பொருத்தமானதாக இருக்குமா? என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *