முலான்பூர்:
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு நியூசண்டிகரில் உள்ள முலான்பூரில் நடைபெறும் தகுதி சுற்று 2-ல் முன்னாள் சாம்பியன்களான ராஜஸ்தான் ராயல்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி தகுதி சுற்று 1-ல் நடப்பு சாம்பியனான ஆர்சிபி அணியிடம் 92 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கிறது.
அந்த ஆட்டத்தில் கேப்டனாக ஷுப்மன் கில்லின் பல்வேறு முடிவுகள் விமர்சனங்களுக்கு வழிவகுத்தன. குறிப்பாக டாஸ் வென்று பேட்டிங் செய்யாமல் பீல்டிங்கை தேர்வு செய்திருந்தார்.
ஆடுகளம் ரன் குவிப்புக்கு கடினமாக இருந்த நிலையில் எளிதான பல்வேறு கேட்ச்களை குஜராத் அணி வீரர்கள் தவறவிட்டனர்.
இதை பயன்படுத்திக் கொண்ட ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் 33 பந்துகளில் 93 ரன்கள் விளாசி ஆட்டத்தின் போக்கையே புரட்டிப் போட்டார்.
255 ரன்கள் இலக்கை துரத்திய குஜராத் அணியில் அழுத்தம் காரணமாக பவர்பிளேவிலேயே 5 விக்கெட்களை கொத்தாக தாரை வார்த்ததால் அதன் பின்னர் மீள முடியாமல் போனது.
இந்த தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இறுதிப் போட்டிக்கு நுழைவதற்கு 2-வது முறையாக கிடைத்துள்ள வாய்ப்பை குஜராத் அணி பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கக் கூடும்.
பேட்டிங்கை பொறுத்தவரையில் குஜராத் அணி அணி தங்களுடைய டாப் 3 பேட்டர்களான ஷுப்மன் கில், சாய் சுதர்சன் மற்றும் ஜாஸ் பட்லர் ஆகியோரையே பெரிதும் நம்பியிருக்கிறது.
இவர்கள் ரன் குவிக்கத் தவறினால், போட்டியைத் தங்கள் பக்கம் திருப்பக்கூடிய பேட்டிங் பலம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் மிடில் ஆர்டரிடம் இல்லை.
பின்வரிசை பேட்டிங்கும் பலன் தரக்கூடியதாக இல்லை. எனினும் கடந்த போட்டியில் ராகுல் டெவாட்டியா 43 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்திருந்தார்.
இது நம்பிக்கை அளிக்கக்கூடும். நடப்பு தொடரில் பந்துவீச்சு தான் குஜராத் அணியின் மிகப்பெரிய பலமாக இருந்து வந்தது.
ஆனால் தரம்சாலாவில் ஆர்சிபி அணிக்கு எதிராக நடந்த போட்டியில் டெத் ஓவர்களில் பந்துவீச்சு கைகொடுக்கவில்லை.
ஃபீல்டிங் துறையிலும் டைட்டன்ஸ் அணி பெரிய அளவில் முன்னேற வேண்டியுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எலிமினேட்டர் ஆட்டத்தில் 47 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்திய உற்சாகத்தில் களமிறங்குகிறது.
அந்த ஆட்டத்தில் 15 வயதாகும் வைபவ் சூர்யவன்ஷி 29 பந்துகளில், 12 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் விளாசி மிரட்டியிருந்தார்.
அவரிடம் இருந்து மேலும் ஒரு மிரட்டலான மட்டைவீச்சு வெளிப்படக்கூடும். எனினும் அவருக்கு முகமது சிராஜ், காகிசோ ரபாடா ஆகி யோர் நெருக்கடிதரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏனெனில் சூர்யவன்ஷி ஷார்ட் பாலில் விக்கெட்டை பறிகொடுக்கக்கூடியவர். இந்த பலவீனத்தை சிராஜும், ரபாடாவும் பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கக்கூடும்.
சூர்யவன்ஷியுடன் இணைந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரியான் பராக், துருவ் ஜூரெல், தஷன் ஷனகா, டொனோவன் பெரைரா ஆகியோரும் கைகொடுத்தால் அணிக்கு கூடுதல் பலம் கிடைக்கும்.
ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கடைசி 5 ஓவர்களில் ராஜஸ்தான் அணி பெரிய அளவில் ரன்கள் குவிக்கத் தவறியது.
இதனால் நடுவரிசை பேட்டிங்கும், பின்வரிசை பேட்டிங்கும் துடிப்புடன் செயல் பட வேண்டியது அவசியம்.
பந்துவீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் அதிவேகம் மற்றும் ஸ்விங்கால் பலம் சேர்த்து வருகிறார்.
நடப்பு தொடரில் 24 விக்கெட்களை வீழ்த்தி அதிக விக்கெட்களை வீழ்த்தி உள்ள வீரர்களின் பட்டியலில் 3-வது இடத்தில் இருக்கும் ஆர்ச்சர், குஜராத் டைட்டன்ஸ் அணியின் பேட்டிங் வரிசைக்கு நெருக்கடி கொடுக்கக்கூடும்.
அவருக்கு உறுதுணையாக நந்த்ரே பர்கர், பிரிஜேஷ் சர்மா, யாஷ் ராஜ் பூனியா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் செயல்படக்கூடும்.
இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி வரும் 31-ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியுடன் பலப்பரீட்சை நடத்தும்.