சென்னை:
இளைஞர்கள் செல்போனை ஒதுக்கி வைத்துவிட்டு புத்தகங்களை வாசிக்க தொடங்க வேண்டும் என சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் அறிவுறுத்தினார்.
மெட்ராஸ் மேனேஜ்மெண்ட் அசோசியேஷன் மற்றும் கொன்ராட் அதெனாவர் அறக்கட்டளை சார்பில் வங்கியாளரும், பிரபல எழுத்தாளருமான ஷியாம் னிவாசன் எழுதிய ‘பெட்டர் நெவர் ஸ்டாப்ஸ்’ புத்தக வெளியீட்டு விழா, சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், புத்தகத்தை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது: இன்றைய தலைமுறையினரிடையே வாசிப்பு பழக்கம் குறைந்து வருகிறது.
இளைஞர்கள் எப்போதும் செல்போனையே பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதைத் தவிர்த்து, புத்தகங்களை வாசிக்கத் தொடங்க வேண்டும்.
மக்கள் படிக்காவிட்டால் புத்தகம் எழுதுவதில் என்ன பயன்? எனவே, அனைவரும் தினமும் குறைந்தது இரண்டு பக்கங்களாவது படிக்கப் பழக வேண்டும்.
எனக்கு கற்றல் குறைபாடான ‘டிஸ்லெக்ஸியா’ இருந்ததால், எண்களை மாற்றிப் புரிந்துகொள்ளும் பழக்கம் இருந்தது. அதனால் வகுப்பறைக்கு செல்லவே பயந்தேன்.
அக்காலத்தில் ஆசிரியர்கள் கண்டிப்புடன் இருந்ததால், தண்டனைகளில் இருந்து தப்பிக்கவே வகுப்பை விட்டு ஓடி கிரிக்கெட் விளையாடத் தொடங்கினேன்.
ஆரம்பத்தில் எனது மகிழ்ச்சிக்காக விளையாடினேன். பின்னர் அது நாட்டுக்கான விளையாட்டாக மாறியது.
வாழ்வில் கற்பதை எப்போதும் நிறுத்தக் கூடாது. செல்போனில் புகைப்படங்கள் எடுப்பதிலேயே கவனம் செலுத்தாமல், வாழும் தருண ங்களை முழுமையாக நேரில் பார்த்து அனுபவித்து வாழ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
எழுத்தாளர் சியாம் னிவாசன் பேசும்போது, “நான் ஒரு எழுத்தாளன் கிடையாது.
வகுப்பறையில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருந்தவர். ஆனால், வாழ்க்கை நமக்கு அற்புதமான வாய்ப்புகளை தருகிறது.
முயற்சியைக் கைவிடாதே, தொடர்ந்து களத்தில் நில். என்னை பொறுத்தவரை இதுவே முக்கியம்.
இந்தப் புத்தகம் நமது அனுபவங்களை பற்றி நாம் சிந்திப்பதற்கான ஒரு வாய்ப்பாகும்” என்றார்.
இந்நிகழ்வில், எழுத்தாளர் ஷியாம் னிவாசனின் மனைவி மாயா ஷியாம், சுந்தரம் பைனான்ஸ் நிர்வாக இயக்குநர் டி.டி.நிவாசராகவன், மகாலிங்கம் அண்ட் சன்ஸ் தலைவர் கே.மகாலிங்கம், கேரட்லேட் நிறுவனர் மிதுன் சசேதி, டிவிஎஸ் கேபிடல் ஃபண்ட்ஸ் தலைவர் கோபால் னிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.