சென்னை:
‘அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்’ என்று பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.
சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள தனக்கோடி நடுநிலைப்பள்ளியில் 2026-27-ம் கல்வி ஆண்டுக்கான புதிய மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ்மோகன் நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: நடப்பு கல்வியாண்டில் இதுவரை அரசுப் பள்ளிகளில் ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 625 பேர் சேர்க்கை பெற்றுள்ளனர்.
புதிதாக 4 லட்சம் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
‘வெற்றி பள்ளி’ என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கழிப்பறை, குடிநீர் வசதி இருக்க வேண்டும் என்பது தொடர்பானதுதான் நான் போட்ட முதல் கையெழுத்து.
அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முந்தைய ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம் குறித்து கேட்கிறீர்கள்.
எங்களைப் பொருத்தவரையில் ஒரு புதிய திட்டத்தால் எந்த அளவுக்கு பயன் ஏற்படுகிறது என்பதுதான் முக்கியம்.
திட்டங்களை மதிப்பீடு செய்ய வேண்டும். திட்டத்தின் விளைவுகளை பார்ப்பதுதான் வருங்காலத்துக்கான அரசியல். அதைச் செய்யவே நாங்கள் விரும்புகிறோம்.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகள் தொடங்க எந்தவித தடையும்.
இல்லை. தமிழ்வழிக் கல்வி, ஆங்கிலவழிக் கல்வி எது என்றாலும் பள்ளிகள் தங்கள் விருப்பப்படி தொடங்கலாம். இரு மொழிக்கொள்கை என்பது தமிழ் மண்ணுக்கானது.
அது நமது மரபிலேயே இருக்கிறது. அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை விரைவில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்னுரிமை தரப்பட வேண்டும். அது நமது பெருமை. அதற்கான சட்ட நடவடிக்கைகள் முறைப்படி எடுக்கப்பட்டு வருகின்றன.
பள்ளிகளில் மாணவிகளின் பாதுகாப்புக்கு உயர் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
மாணவிகள் பாலியல்ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாக நேரிட்டால் விரைந்து நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும்.
கல்விக்கொள்கையை பொருத்தவரையில் தற்போதைய நமது எஸ்சிஈஆர்டி பாடத்திட்டமே மிகச் சிறந்ததாக இருக்கிறது.
மாநில நலன் சார்ந்து மாநில கல்விக்கொள்கையே நமக்கு போதுமானது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.
அரசு கேபிள் இணைப்பில் இருந்து புதிய தலைமுறை தொலைக்காட்சி நீக்கப்பட்டுள்ளது தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், “ஆக்கபூர்வமான விமர்சனங்களை வரவேற்கிறோம். ஜனநாயகத்தி்ன் முக்திய தூண் ஊடகம்.
புகார் வந்தவுடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு குறைகள் சரிசெய்யப்பட்டுவிட்டன.
கேபிளில் புதிய தலைமுறை டிவி நம்பர் பின்னால் சென்றுவிட்டது என்று சொன்னார்கள். அதையும் உடனே சரிசெய்துவிட்டோம்” என்றார்.
இந்த ஆய்வின்போது, பள்ளிக்கல்வித் துறை செயலர் பி.சந்தர மோகன், பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன், தொடக்கக் கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷ் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.