வேறு வழியின்றி, திமுக அரசு இன்று இரண்டு அமைச்சர்களை பதவி நீக்கம் செய்திருக்கிறது – தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சனம்!

சென்னை:
வேறு வழியின்றி, திமுக அரசு இன்று இரண்டு அமைச்சர்களை பதவி நீக்கம் செய்திருக்கிறது என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய அரசியல் வரலாற்றிலேயே முதன்முறையாக, ஒரே நாளில் இரண்டு அமைச்சர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டிருப்பது, தமிழகத்தில் அரங்கேறியிருக்கிறது. வேறு வழியின்றி, திமுக அரசு இன்று இரண்டு அமைச்சர்களை பதவி நீக்கம் செய்திருக்கிறது.

ஊழலின் ஒட்டுமொத்த உருவமாக இருக்கும் அமைச்சர் திரு. செந்தில் பாலாஜியை, இத்தனை ஆண்டு காலம் தனது அமைச்சரவையில் வைத்து அழகு பார்த்த தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு உச்ச நீதிமன்றம் விடுத்த கடும் எச்சரிக்கைக்குப் பிறகு, வேறு வழியின்றி, இன்று அவரைப் பதவி நீக்கம் செய்திருக்கிறார்.

ஏற்கனவே பல ஊழல் வழக்குகள், கழுத்துக்கு மேல் கத்தியாகத் தொங்கிக் கொண்டிருக்கையில், நாள்தோறும் நமது தாய் மற்றும் சகோதரிகளை, அநாகரீகமான வார்த்தைகளால் குறிப்பிட்ட அமைச்சர் திரு. K. பொன்முடி அவர்களும், பொதுமக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து, வேறு வழியின்றி இன்று பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.

ஆனால், திமுக எனும் கட்சியின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், ஊழலும், தரம்தாழ்ந்த செயல்பாடுகளும்தான் அதன் ஒட்டு மொத்த பக்கங்களையும் நிரப்பியிருக்கின்றன. ஊழலும், அதிகார துஷ்பிரயோகமும்தான், திமுக செய்து வரும் அரசியலின் இத்தனை ஆண்டு காலத் தூண்களாக இருக்கின்றன.

திமுகவின் இந்த மக்கள் விரோதச் செயல்பாடுகளை எதிர்த்து, தற்போது தமிழக மக்கள் எதிர்ப்புக் குரல் எழுப்புகையில், திமுகவின் அடித்தளமே ஆட்டம் காண்பதைப் பார்க்கும்போது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், திமுக அரசு தமிழக அரசியலில் இருந்து அகற்றப்படுவதற்கான தொடக்கப் புள்ளியாகவே இதனை நான் காண்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *