சொத்துவரி முறைகேட்டில் கவுன்சிலர்கள் ரூ.2000 கோடி முறைகேடு செய்து சம்பாதித் ததாகச் சொல்லும் அமைச்சர் நிர்மல் குமார், அதை நிரூபிக்க வேண்டும், இல்லாவிட்டால் அவரது வீட்டை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவோம் – மதுரை மாநகராட்சி திமுக கவுன்சிலர்கள்!!

மதுரை:
சொத்துவரி முறைகேட்டில் கவுன்சிலர்கள் ரூ.2000 கோடி முறைகேடு செய்து சம்பாதித்ததாகச் சொல்லும் அமைச்சர் நிர்மல் குமார், அதை நிரூபிக்க வேண்டும், இல்லாவிட்டால் அவரது வீட்டை முற்றுகையி ட்டுப் போராட்டம் நடத்துவோம் என்று திமுக கவுன்சிலர்கள் நேற்று நடந்த மாநகராட்சிக் கூட்டத்தில் பகிரங்க சவால் விடுத்தனர்.

அமைச்சர் சிடிஆர்.நிர்மல் குமார், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், ‘‘மதுரை மாநகராட்சியில் 100 கவுன்சிலர்களும் ரூ.10 கோடி முதல் ரூ.15 கோடி வீதம் ரூ.2,000 கோடி வரை சம்பாதித் துள்ளனர்,’’ என்றார்.

அவரது இந்தப் பேச்சுக்கு நேற்று மாநக ராட்சிக் கூட்டத்தில் திமுக கவுன் சிலர்கள் குழுத் தலைவர் மா.ஜெயராமன் தலைமையில் அக்கட்சி கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அப்போது ஜெயராம் பேசுகையில், ‘‘விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக பக்கம் சென்றுவிட்டன. காங்கிரஸ் சொல்லாமல் சென்று துரோகம் செய்துவிட்டது.

மதுரை மாநகராட்சியில் தற்போது திமுக ‘சிங்கிள்’ ஆகத்தான் உள்ளது. இந்தக் கூட்டத்தில், அமைச்சர் நிர்மல்குமாருக்கு திமுக ஒரு சவால் விடுகிறது.

கவுன்சிலர்கள் அனைவரும் சொத்துவரி முறைகேட்டில் ரூ.20 கோடி முதல் ரூ.50 கோடி வரை சம்பாதித்ததாக அரசு விழாவில் அமைச்சர் கூறியுள்ளார்.

அவரது வாயில் இருந்து வருவதெல்லாம் பொய். அவர்தான் சட்டத்துறை அமைச்சர்.

ஆட்சியும், அதிகாரமும் அவர்களிடம் உள்ளது. விசாரணை கமிஷன் அமைத்து விசாரியுங்கள். உண்மையான அமைச்சராக இருந்தால் அவர் கூறிய குற்றச்சாட்டை 3 மாதங்களில் நிரூபிக்க வேண்டும்.

அப்படி அவர் நிரூபிக்காவிட்டால் அமைச்சர் நிர்மல் குமார் வீட்டை முற்றுகையிடுவோம் அரசு விழாவில், கட்சிக் கூட்டத்தில் அவருக்கு என்ன பேச வேண்டும் என்பது தெரியவில்லை.

கூட்டத்துக்கு வந்துள்ள தவெக எம்எல்ஏ-க்கள் அவரிடம் போய் சொல்லுங்கள்’’ என்றார்.

ஜெயராமனுக்கு ஆதரவாக மாநகராட்சிக் கூட்டத்தில் ஒட்டு மொத்த திமுக கவுன்சிலர்களும் எழுந்து நின்று, அமைச்சர் நிர்மல் குமாருக்கு எதிராக முழக்கமிட்டு, கண்டனம் தெரிவித்தனர்.

அப்போது காங்கிரஸ், விசிக, மதிமுக மற்றும் அதிமுக கவுன்சிலர்கள், எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர்.

அதிருப்தியடைந்த ஜெயராமன், ‘ அமைச்சர் 100 வார்டு கவுன்சிலர் களையும்தான் குற்றம்சாட்டியுள்ளார்’’ என்றார்.

அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் சோலைராஜா, ‘‘நாங்கள்தான் சொத்துவரி முறைகேட்டை வெளிக்கொண்டு வந்தோம்.

நீதிமன்றத்தில் வழக்குப் போட்டதும், போராட்டங்கள் மேற்கொண்டதும் நாங்கள்தான்.

முறைகேடு செய்தோம் என்று யாரும் எங்களைச் சொல்ல முடியாது’’ என்றார். கிழக்கு தொகுதி தவெக எம்எல்ஏ கார்த்திகேயன், ‘‘எப்படி பேச வேண்டும் என்று திமுக கவுன்சிலர்கள் எங்களுக்குச் சொல்ல வேண்டாம்.

அமைச்சர் பேசியது ஒரு பொது நிகழ்ச்சி. எதற்காக மேயர், மண்டலத் தலைவர்கள் ராஜினாமா செய்தார்கள். மேயர் இந்திராணி கணவர் பொன்வசந்த் ஏன் கைது செய்யப்பட்டார்.

ஏராளமான அதிகாரிகள், ஊழியர்கள் எதற்கு தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டனர்’’ என்றார். மற்றொரு தவெக எம்எல்ஏ கல்லாணை எழுந்து, ‘‘நாங்கள் சொத்துவரி முறைகேட்டை விடப்போவதில்லை.

சட்டப்பேரவையில் பேசி முறைகேட்டில் யார் யாருக்குத் தொடர்பு உள்ளதோ, அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

அதற்கு ஜெயராமன், ‘‘விசா ரணை நியாயமாக நடக்கவே மேயர், மண்டலத் தலைவர்கள் பதவி விலகினர். அவர்களை டிஸ்மிஸ் செய்யவில்லை. நாங்கள் தவறு செய்திருந்தால் தூக்கில் போடுங்கள்’’ என்றார்.

அமைச்சரிடம் போய் சொல்லுங்கள்! – துணை மேயர் நாகராஜன், ‘‘நான் அரசியல் பேச விரும்பவில்லை.

அரசியல் பேசுவதாக இருந்தால் திமுக, தவெகவினர் வெளியேபோய் பேசிக் கொள்ளுங்கள். ஆனால், அமைச்சர் நிர்மல்குமார், கவுன்சிலர்களை அப்படி பொத்தாம் பொதுவாக விமர்சிக்கக் கூடாது.

அதிகாரிகள், கவுன்சிலர்கள், மக்களுக்காக இரவு பகலாகப் பணிபுரிகிறோம்.

ஒரு சிலர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த கவுன்சிலர்களையும் சொல்லிவிடமுடியாது. மேலும், இந்த வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது.

உங்கள் அமைச்சரிடம், சரியான தரவுகள், தகவல்கள் இல்லாமல் அப்படி பேசக்கூடாது என்று சொல்லுங்கள், ’’ என்று தவெக எம்எல்ஏ-க்கள் கல்லாணை, கார்த்திகேயன், கோபிசன், தங்கப்பாண்டியன் ஆகியோரை பார்த்துக் கூறினார்.

அதற்கு, திமுக கவுன்சிலர்கள், துணை மேயர் நாகராஜனுக்கு நன்றி தெரிவித்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *