ஒசூர்:
“எந்த சூழ்நிலையிலும் முதல்வரோ, அவரது அலுவலகத்தில் இருந்தோ யாரும் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்கவில்லை என்பதை தெளிவாக சொல்லிக் கொள்கிறேன்,” என அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் கே.பி. முனுசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “முதல்வர் விஜய் உழைத்து இந்த பதவிக்கு வரவில்லை. நடிப்பு தொழிலில் ஒரு மாயையை உருவாக்கினார்.
அந்த மாயத் தோற்றத்தை இன்ஸ்டாவிலும், ரீல்ஸிலும் காட்டினார். இளைஞர்கள் இப்படித்தான் நம் முதல்வர் இருப்பார் என்ற நம்பிக்கையில் வாக்களித்துள்ளார்கள். அவர்கள் மீது குற்றமில்லை. அந்த நம்பிக்கைக்கு உரியதாக அவர் செயல்பட வேண்டும்.
திருச்சியில் நடைபெற்ற நன்றி தெரிவிப்புக் கூட்டத்தில், சினிமாவில் எப்படி உணர்ச்சிகளை தூண்ட வேண்டுமோ, கொடுத்த டயலாக்கை பேச வேண்டுமோ, அதுபோலவே இந்த கூட்டத்திலும் 15 நிமிடம் பேசி முடித்துவிட்டார்.
அவர்கள் என்ன எழுதிக் கொடுத்தார்களோ, அதைப் படித்தார் அவ்வளவுதான்.
மக்கள் எதற்காக நமக்கு வாக்களித்தார்கள், மக்களுக்கு நாம் என்ன வாக்குறுதி கொடுத்தோம், அதன் அடிப்படையில் நாம் ஆட்சிக்கு வந்த பிறகு என்னென்ன திட்டங்களை நாம் கொண்டு வர இருக்கிறோம்; இது குறித்து சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு எடுக்கும்போதே சொல்லி இருக்க வேண்டும். அங்கு மவுனியாக இருந்தார்.
என்ன என்ன திட்டங்களை, தேவைகளை பிரதமர் மோடியிடம் கொண்டு செல்ல வேண்டுமோ அதை தயார் செய்துவிட்டு சென்றிருக்க வேண்டும்.
முதல்வருக்கும், பிரதமருக்கும் இடையே 10 நிமிடம் தான் உரையாடல் நடந்தது. அதில் 5 நிமிடங்கள் நலம் விசாரிப்பதில் முடிந்துவிடும்; மீறி உள்ள 5 நிமிடம் என்ன பேசி இருப்பார்கள்.
நன்றி அறிவிப்பு கூட்டத்திலும் அவர் ஒன்றும் சொல்லவில்லை. முதல்வர் விஜய்க்கு சொந்த சிந்தனை கிடையாது; கொடுத்ததை படித்து விட்டார்.
எந்தக் கட்சியும் அழிந்து போகாது. ஒரே ஒரு தொண்டன் இருந்தாலும் அந்த கட்சி இருக்கும். அவன் கொள்கையோடு இருப்பான்.
கம்யூனிஸ்ட்டுகள் நூறு ஆண்டு காலம் இருக்கிறார்கள்; ஆட்சிக்கு வர முடியாது எனத் தெரிந்தும் கொள்கையை முன்னிறுத்தி இறுதி வரை போராடுவார்கள்.
அதுபோலத் தான் அதிமுகவும். இது விஜய்க்கு தெரியாது. அவர் சரக்கில்லாத முதல்வர்.
அமைச்சர் நிர்மல் குமார் தவறான தகவலை கூறியுள்ளார். ஏதோ ஒன்று சொல்ல வேண்டும் என சொல்கிறார். ஆனால் இப்படிச் சொன்னால் அவர் மாட்டிக் கொள்வார்.
பத்திரிகையாளர்களை சந்திக்கும்போது தேவையற்ற வார்த்தை களை விடக் கூடாது. முதல்வர் விஜய், எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரை விமர்சிக்கவில்லை எனில், முதலில் அவர் யாரை சந்தித்திருக்க வேண்டும்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை தான் அவர் சந்தித்திருக்க வேண்டும். கடைசி வரை அவர் பார்க்கவில்லை.
எடப்பாடி பழனிசாமியை முதல்வர் விஜய் சந்திக்க நேரம் கேட்டும், அளிக்கப்படவில்லை என அமைச்சர் நிர்மல் குமார் கூறியுள்ளது முற்றிலும் தவறான செய்தி.
எந்தச் சூழ்நிலையிலும் முதல்வரோ, அவரது அலுவலகத்தில் இருந்தோ யாரும் இபிஎஸ்-ஐ சந்திக்க அனுமதி கேட்கவில்லை என்பதை தெளிவாக சொல்கிறேன்” என்றார்.