வனத்துறையினர் தடுத்து நிறுத்தியும் அத்துமீறி சென்று மாடு மேய்த்ததால் சீமான் மீது வன உயிரின விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு !!

பாரம்பரிய நாட்டுமாடு இனமான மலைமாடுகளுக்கு வனப்பகுதியில் மேய்ச்சல் அனுமதி வழங்கக்கோரி, நாம் தமிழர் கட்சி சார்பில் தேனி மாவட்டம் போடி அருகே முந்தல் பகுதியில் மலையேறி மாடு மேய்க்கும் போராட்டம் நேற்று நடத்தப்பட்டது. போராட்டத்துக்கு அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார்.

இந்த போராட்டத்துக்கு வனத்துறையினர் அனுமதி கொடுக்கவில்லை. இதனால், வனத்துறை மற்றும் போலீசார் முந்தல் அடவுப்பாறை பகுதியில் தடுப்புகள் அமைத்து இருந்தனர்.


தடையை மீறி சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சியினர் மலைப்பகுதிக்கு சென்றனர். அப்போது கட்சியினர் அங்கு இருந்த தடுப்புகளை அகற்றினர். இதனால் போலீசாருக்கும், அக்கட்சியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அதன்பிறகு மாடுகளையும் தடையை மீறி மலைப்பகுதிக்கு அழைத்துச் சென்றனர். மாடு மேய்க்கும் போராட்டத்துக்காக சீமான் கையில் கம்புடன் மலையேறினார். அங்கு போராட்டத்தை நடத்திவிட்டு பின்னர் அவர் திரும்பி வந்தார்.

அப்போது பேசிய சீமான் கூறுகையில்,
தேனி மாவட்டத்தில் மலைகளில் கற்குவாரிகள் நடத்த அனுமதி கொடுக்கிறார்கள். ஆனால், பாரம்பரிய மாடுகளை மேய்ப்பதற்கு அனுமதிப்பது இல்லை.

வனத்துறையினர் இதற்கு தடை விதித்ததால் 1 லட்சம் மாடுகள் இருந்த இடத்தில், தற்போது 5 ஆயிரம் மாடுகள் தான் உள்ளன. மலைப்பகுதிகளில் ஆடு, மாடு மேய்ப்பதை தடுத்தால் மீண்டும் மாடு மேய்க்கும் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபடுவோம் என்று கூறினார்.

இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட அக்கட்சியினர் 56 பேர் மீது வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வனத்துறையினர் தடுத்து நிறுத்தியும் அத்துமீறி சென்று மாடு மேய்த்ததால் சீமான் மீது வன உயிரின விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *