சென்னை:
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்திற்கு, மதுபானங்களை விநியோகம் செய்யும் உற்பத்தியாளர்களுக்கு புதிய கூடுதல் கட்டணத்தை விதித்து தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.600 கோடி முதல் ரூ.1,000 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக “மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை”யின் அரசாணை G.O.Ms.No.30-இன் படி, திருத்தப்பட்ட புதிய கட்டண அமைப்பு ஜூன் 5 முதல் அமலுக்கு வந்துள்ளது.
இதன்படி, உற்பத்தியாளர்கள் மதுபானங்களை ஆலையிலிருந்து வெளியிடுவதற்கு முன்பே இந்த கட்டணத்தை செலுத்த வேண்டும்.
வெளிநாட்டு மதுபானங்கள் வழக்கமான பெட்டிக்கு(Standard Case) ரூ.90 கூடுதல் கட்டணமும், பீர் ரூ.40 கூடுதல் கட்டணம் மற்றும் ஒயினுக்கு ரூ.20 கூடுதல் கட்டணமும் முழுக்க முழுக்க மதுபான உற்பத்தியாளர்கள் மீது மட்டுமே விதிக்கப்பட்டுள்ளது.
இதனால், டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்களின் சில்லறை விலையில் தற்போதைக்கு எந்த மாற்றமும் இருக்காது என்றும், பொதுமக்களுக்கு விலை உயர்வு ஏதும் இல்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
முந்தைய நடைமுறைகளில் ‘கட்சி நிதி’ அல்லது பிற வழிகளில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் உற்பத்தியாளர்களிடம் வசூலிக்கப்பட்ட தொகையைத் தடுத்து, முறைப்படுத்தும் நோக்கில் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதிதாக பொறுப்பேற்றுள்ள தமிழக அரசின் உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்திற்குப் பிறகு, இந்த வருவாய் கசிவுகள் முற்றிலுமாகத் தடுக்கப்பட்டு, நேரடியாக அரசு கருவூலத்திற்குச் செல்லும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2024-25 நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ரூ.48,344 கோடி வருவாய் கிடைத்த நிலையில், இந்தப் புதிய கட்டண விதிப்பு அரசின் வருவாயை மேலும் உயர்த்த உதவும் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் டாஸ்மாக் மது உற்பத்தியாளர்களுக்கு பெட்டிக்கு ரூ.90 வரை கூடுதல் கட்டணம் விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு ரூ.600 கோடி வரை கூடுதல் வருவாய் கிடைக்கும்.
இந்த கட்டண உயர்வு உற்பத்தியாளர்களுக்கு மட்டுமே என்பதால், கடைகளில் மதுபானங்களின் சில்லறை விலை உயர வாய்ப்பில்லை.