அனைத்து மாவட்டங்களிலும் ‘போதைப் பொருள் தடுப்பு சிறப்புப் படை’ உருவாக்கப் படும் – ஆளுநர் உரை!!

சென்னை:
அனைத்து மாவட்டங்களிலும் ‘போதைப் பொருள் தடுப்பு சிறப்புப் படை’ உருவாக்கப்படும் என்று ஆளுநர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் சில ஆண்டுகளாக போதைப் பொருள் கலாச்சாரம் வேரூன்றியுள்ளது. இதை கட்டுப்படுத்த முந்தைய அரசு ஆக்கப்பூர்வமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தமிழகத்தின் சட்டம் – ஒழுங்கு சீர்கேட்டுக்கு முதல் காரணம் மாநிலத்தில் பரவலாக உள்ள போதை பொருள் புழக்கம்தான்.

போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதில் இந்த அரசு முழு மூச்சுடன் செயல்படும்.

இதை செயல்படுத்த, அனைத்து மாவட்டங்களிலும் போதைப் பொருள் தடுப்பு சிறப்புப் படையை உருவாக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

போதைப் பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.

முதல்கட்டமாக, வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்களில் இருந்து 500 மீட்டர் தொலைவில் இருந்த 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

கள்ளச் சாராய நடமாட்டம், சட்ட விரோத மது விற்பனையை முற்றிலும் ஒழிக்கவும், இத்துறையில் முழுமையான கண்காணிப்பை ஏற்படுத்தவும் கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்படும்.

இதன்மூலம் ஆயத்தீர்வை வசூல் மற்றும் மதுபான விநியோகத்தில் உள்ள முறைகேடு தடுக்கப்படும்.

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோர் மீது அரசு மிக கடுமையான நடவடிக்கை எடுத்து அதிகபட்ச தண்டனையை பெற்றுக் கொடுக்கும்.

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படை’ உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்கு 2,545 புதிய பணியிடங்களுடன், 319 நான்கு சக்கர ரோந்து வாகனங்கள், 101 இருசக்கர வாகனங்கள் மற்றும் ட்ரோன்கள் வாங்கப்பட உள்ளன.

இப்படைக்காக ரூ.354 கோடி நிதி ஒதுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *