சென்னை:
“இது குறுகிய கால கூட்டத்தொடராக இருக்கும் காரணத்தால், கேள்விகளை அனுப்பி அந்தந்த துறைகளில் பதில்களை பெற்றுத் தருவதில் காலதாமதம் ஏற்படும். எனவே இந்தக் கூட்டத் தொடரில் வினா-விடை நேரம் இருக்காது” என சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், “அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, வரும் ஜூன் 19, 22, 23 ஆகிய தேதிகளில் ஆளுநர் உரை மீது விவாதம், பதிலுரை ஆகியவை நடைபெறும்.
ஜூன் 19-ம் தேதி மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பி னர்களுக்கு இரங்கல் குறிப்புகள் இருக்கும்.
முதுபெரும் கம்யூனிஸ்ட் தலைவர் நல்லக்கண்ணு, திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, முன்னாள் சட்டப்பேரவைச் செயலாளர் சி.கு.ராமசாமி, திரைப்பட தயாரிப்பாளர்கள் ஆர்.பி.சவுத்ரி, கே.ராஜன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்படும்.
இது குறுகிய கால கூட்டத்தொடராக இருக்கும் காரணத்தால், கேள்விகளை அனுப்பி அந்தந்த துறைகளில் பதிலைப் பெற்றுத் தருவதில் காலதாமதம் ஏற்படும். எனவே இந்தக் கூட்டத் தொடரில் வினா-விடை நேரம் இருக்காது.
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்பட வேண்டும் என்பதே நம் நோக்கம். தேசிய கீதம் இன்று இருமுறை பாடப்பட்டதில் தவறு ஏதும் இல்லை. இந்த நடைமுறை தொடர்வது நலமாக இருக்கும்.
மிக நீண்ட இடைவேளைக்கு பிறகு மிக சுமுகமான முறையில் இந்த சட்டப்பேரவை கூட்டம் நடத்த ஒத்துழைப்பு தந்த ஆளுநருக்கு நன்றி தெரிவிக்க கடமைப் பட்டுள்ளேன்.
சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வது குறித்து பரிசீலனை செய்து வருகிறோம். அலுவல் ஆய்வுக் குழுவில் தேவையான எண்ணிக்கையில் உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அதிமுக சட்டப்பேரவைக் குழு தலைவர், கொறடா குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
அதிமுகவிலிருந்து ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்கள் 7 தினங்களுக்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அவர்கள் விளக்கம் கொடுத்துள்ளனர், அது ஆய்வில் உள்ளது.
இதுபற்றி ஆய்வுக்குப் பின்னர் உரிய முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.