சென்னை:
“இனிமேல் மாநிலத் தலைவர் பதவியில் தொடர வேண்டாம் என என்னுடைய உள்மனது சொல்கிறது” என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
பெங்களூரூவில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கேவை சந்தித்துவிட்டு வந்த செல்வப்பெருந்தகை சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேர்தல் முடிந்தவுடன் நான் மாநிலத் தலைவராகத் தொடர்வதற்கு வாய்ப்பில்லை.
ஆகையால், வேறு ஒருவர் அந்தப் பணியை மேற்கொள்வார் என, தேர்தலுக்கு முன்பு நான் தெரிவித்திருந்தேன்.
இதை செய்தியாளர்களிடம் மட்டுமில்லை, எங்கள் கட்சித் தலைமைக்கும் நான் சொல்லியிருக்கிறேன். அந்த அடிப்படையில் கார்கேவை சந்தித்தபோது அந்த வாதமும் பேசப்பட்டது.
அதற்கு கார்கே, ‘சிறிது பொறுமையாக இருங்கள். நான் கூப்பிடுகிறேன்’ என்று கூறியிருக்கிறார்.
தேர்தல் முடிவுகள் எப்படி வரும் என தெரியாதபோதும், மாநிலத் தலைவர் பதவியில் தொடர மாட்டேன் எனத் தெரிவித்திருந்தேன்.
தேர்தலுக்கு முன்பே சில கசப்புணர்வுகள் ஏற்பட்டதே இதற்கு காரணம். சில நண்பர்கள் புரிதல் இல்லாமல் பேசினார்கள்.
எனவே, என்னுடைய உள்மனது ‘இனிமேல் மாநிலத் தலைவர் பதவியில் தொடர வேண்டாம்’ என சொன்னது. எனவே தலைமை என்னுடைய கோரிக்கையை பரிசீலனை செய்து என்னை விடுவிக்கும் என்று நான் நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.