எனது ஆதரவாளர்கள் இல்லாமல் நான் இல்லை; அதனால் எனது ஆதரவாளர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பழைய பதவிகளை மீண்டும் வழங்க வேண்டும் !! எஸ்.பி.வேலுமணி…

சென்னை:
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கொடுத்த புதிய பதவியால் எஸ்.பி.வேலுமணி அதிருப்தியில் இருப்பதாகவும், தனது ஆதரவாளர்க ளுக்கு மீண்டும் பழைய பதவிகளை வழங்க வேண்டும் என்று பழனிசாமியிடம் வலியுறுத்தி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தவெக ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிக்க, அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமியின் ஒப்புதல் இன்றி, சி.வி.சண்முகம் தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் ஆதரவளித்திருந்தனர்.

இதைத் தொடர்ந்து, சி.வி.சண்முகம் அணிக்கு ஆதரவாக செயல்பட்ட, எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 26 மாவட்ட செயலாளர்களின் பதவிகளை பறித்து, உடனடியாக 17 புதிய மாவட்ட செயலாளர்களை பழனிசாமி நியமித்தார்.

அதனைத் தொடர்ந்து, அந்த மாவட்டங்களில், பழைய மாவட்ட செயலாளர்களிடமிருந்து புதிய மாவட்ட செயலாளர்கள் போராடி அலுவலக சாவியை பெற்றனர்.

இந்நிலையில் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், இசக்கி சுப்பையா உள்ளிட்ட 6 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டனர். சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் தவிர மற்றவர்கள் தவெகவில் இணைந்து விட்டனர்.

இதற்கிடையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ‘‘கட்சி பதவி பறிக்கப்பட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் மன்னிப்பு கடிதம் கொடுத்து திரும்பி வந்த நிலையில், அவர்களுக்கு பழைய பதவிகளை கொடுக்க வேண்டும்’’ என பழனிசாமியிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

அதை பரிசீலித்த பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி ஏற்கெனவே தலைமை நிலைய செயலாளர், மாவட்ட செயலாளர் பதவிகளை வகித்து வந்த நிலையில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பதவி கொடுத்தார். மேலும், மாநில நிர்வாகிகள் பலருக்கு புதிய பதவிகளை கொடுத்தார்.

ஏற்கெனவே 26 மாவட்ட செயலாளர்களிடம் பதவிகள் பறிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்கு மீண்டும் அதே பதவி கொடுக்காமல், அதிகாரமில்லாத மாநில பதவி கொடுக்கப்பட்டதாக எஸ்.பி.வேலுமணி அதிருப்தியில் இருந்தார்.

இந்நிலையில், தொண்டாமுத்தூரில் நேற்று முன்தினம், அதிமுக கொடி, சின்னம், பழனிசாமி படம் எதுவும் இன்றி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில், பதவி பறிக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு மீண்டும் பதவி வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

கூட்டத்தின் முடிவில், செய்தியாளர்களிடம் பேசிய வேலுமணி, ‘‘ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்திருந்தால், அதிமுக பலமாக இருந்திருக்கும்’’ என கருத்து தெரிவித்திருந்தார்.

இதன்மூலம் மீண்டும் பழனிசாமிக்கு எதிராக வேலுமணி செயல்பட தொடங்கி இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதன் தொடர்ச்சியாக, ‘‘எனது ஆதரவாளர்கள் இல்லாமல் நான் இல்லை. அதனால் எனது ஆதரவாளர்களிடமிருந்து பறிக்கப்பட்ட பழைய பதவிகளை மீண்டும் வழங்க வேண்டும்’’ என பழனிசாமிக்கு நெருக்கமான தலைவர்கள் மூலமாக வேலுமணி தகவல் சொல்லி அனுப்பி இருப்பதாகக் கூறப்படுகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *