தவெக அரசு, தனது தேர்தல் வாக்குறுதிப்படி பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்!! தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்!!

சென்னை:
தற்போதுள்ள 11,773 பகுதி நேர ஆசிரியர்களின் எதிர்காலம் மற்றும் குடும்ப நலனை கருத்தில் கொண்டு தவெக அரசு, தனது தேர்தல் வாக்குறுதிப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

”தவெக தேர்தல் அறிக்கையில் தற்காலிகமாக பணியாற்றும் ஆசிரியர்களில் 5 வருடங்களை நிறைவு செய்து இருப்பவர்கள், நிரந்தர ஆசிரியர்களாக மாற்றப்படுவார்கள் என வாக்குறுதி அளிக்கப்பட்டது.

இதன்படி 16 கல்வி ஆண்டுகளாக தற்காலிகமாக பணிபுரிகின்ற உடற்கல்வி, ஓவியம், தொழிற்கல்வி பகுதிநேர ஆசிரியர்களை முதல்வர் விஜய், நிரந்தரம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

பகுதி நேர ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படுகிற ரூபாய் 15 ஆயிரம் தொகுப்பூதிய சம்பளத்தை வைத்துக் கொண்டு இன்றைய விலைவாசி உயர்வில் குடும்பங்களை நடத்த முடியாமல் பரிதவித்து வருகிறார்கள்.

வாழ்வாதாரத்திற்காக போராடி ஏற்கனவே 15 கல்வி ஆண்டுகள் முடிந்து விட்டது. பலர் தற்போது 50 வயதை கடந்து விட்டார்கள்.

இன்றைய நிலையில் பணி நிரந்தரம் செய்தாலும் சில ஆண்டுகளில் பணி ஓய்வை அடைந்து விடுவார்கள்.

பல ஆண்டுகள் மாணவர்கள் கல்வி நலனுக்காக உழைத்தவர்களை முதல்வர் விஜய் அங்கீகரித்து தமிழக அரசுப் பணிக்கு ஈர்க்க வேண்டும்.

அரசு சலுகைகள் கிடைத்து சில காலமாவது நல்ல வாழ்க்கை வாழ தவெக அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும்.

இதற்காக முதல்வர் விஜய் தற்போதுள்ள 11,773 பகுதி நேர ஆசிரியர்களின் எதிர்காலம் மற்றும் குடும்ப நலனை கருத்தில் கொண்டு வாழ்வாதரம் வழங்கிட தவெக தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்ற பணி நிரந்தரம் கோரிக்கை என்பதால் இதற்கான கோப்பில் முதல்வர் விஜய் கையொப்பமிட்டு அரசின் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்” என்று மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *