சென்னை:
“அதிமுகவோடு சேர்ந்து கூட்டணி அமைக்கும் எண்ணம் ஒரு சிறு துளி கூட மு.க.ஸ்டாலினுக்கு கிடையாது. குதிரை பேரத்தில் ஈடுபட்டி ருந்தால், கூட்டணிக் கட்சிகளை ஆதரிக்க சொல்லியிருக்க மாட்டோம்,” என திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “இரண்டு மதிமுக உறுப்பினர்களையும் ராஜினாமா செய்யச் சொல்லுங்கள்; அவர்களை நான் வெற்றி பெறச் செய்கிறேன் என விஜய் சொன்னார் என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்.
அந்தப் பக்கம் குதிரை பேரம், யானை பேரம் என எல்லாம் நடந்திருக்கிறது என்பதற்கு அது ஓர் எடுத்துக்காட்டு. ஆனால் இந்த குதிரை பேரத்துக்கு லஞ்ச ஒழிப்புத்துறையோ, காவல்துறையோ எந்த வழக்கும் பதிவு செய்யவில்லை.
விஜய் கரூருக்கு செல்வதற்கு முன்பு செந்தில்பாலாஜியை கைது செய்ய முயற்சி செய்கிறார்கள். தவெக அட்சிக்கு வந்த பிறகு குதிரை பேர அரசியல் நடக்கிறது.
4 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு,தவெகவில் இணைகிறார்கள். 108 என்பதை 120 ஆக மாற்ற வேண்டும் என்ற இலக்கோடு, குதிரை பேர அரசியலில் ஈடுபட்டுள்ளனர்.
ஒன்றிய அரசு இது குறித்து விசாரிக்க வேண்டும். திமுக எப்போதுமே குதிரை பேரத்துக்கு எதிரானதுதான். ஜனநாயகத்தை நாங்கள் நம்புகிறோம்.
அதிமுகவோடு சேர்ந்து கூட்டணி அமைக்கும் எண்ணம் ஒரு சிறு துளி கூட மு.க.ஸ்டாலினுக்கு கிடையாது. குதிரை பேரத்தில் ஈடுபட்டிருந் தால், கூட்டணிக் கட்சிகளை ஆதரிக்க சொல்லியிருக்க மாட்டோம்.
குதிரை பேர அரசியலுக்கு எடுத்துக்காட்டு, ஒவ்வொரு எம்எல்ஏவும் தவெகவுக்கு தாவுவதுதான்; குளம் வற்றிப் போனால் பறவைகள் அடுத்த குளத்தை தேடிச் செல்வது வழக்கம்.
நிர்மல் குமார் பொய் சொல்கிறார். முதல்வருக்கு வெற்றியையும், தோல்வியையும் மாற்றி மாற்றி தருவார்கள்.
நாங்கள் ஐந்தாண்டுகளில் செய்த பாதி திட்டங்களை கூட, அவர்களால் செய்ய முடியாது. நிச்சயமாக நாங்கள் ஆட்சியை கவிழ்க்க மாட்டோம்.
தேர்தலை சந்தித்துதான் ஆட்சிக்கு வருவோம். மக்களை சந்திக்காமல் ஆட்சிக்கு வரவே மாட்டோம் கொல்லைப்புற வழியாக ஆட்சிக்கு வரும் எண்ணம் எங்களுக்கு துளியும் கிடையாது.
வைகோவுக்கு காட்டு கத்து மட்டும் தான் கத்த தெரியும். அவர் எங்களை பெயரை சொல்லி லஞ்சம் வாங்கியிருந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பில்லை.
இன்றும் ஷூட்டிங் தான் நடக்கிறது. சட்டமன்றம் படப்பிடிப்பு நிலையம். அங்கு முதல்வர் விஜய் ஹீரோவாக நடிக்கிறார்.
நாங்கள் எதிர்க்கட்சியாக நடிக்கிறோம். அனைவரையும் நடிகர்களாக மாற்றிய பெருமை தவெக ஆட்சிக்கு உண்டு.
அங்கு இயக்குநர் சபாநாயகர்; ஹீரோயின் சட்டப்பேரவைக்கு வராதவர்; அவரை உங்களுக்கு நன்றாக தெரியும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.