முதல்வர் விஜய்யின் குதிரை பேர அரசியல் குறித்து ஆளுநர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவோம்; ஆர்.எஸ்.பாரதி!!

சென்னை:
“முதல்வர் விஜய்யின் குதிரை பேர அரசியல் குறித்து ஆளுநர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவோம்.

அதிமுகவின் எச்சில் இலைகளை சேர்த்துக்கொண்டுள்ள முதல்வர் விஜய், கொத்து பரோட்டா என்றெல்லாம் கொச்சையாக பேசுவதா?” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கரூரில் முதல்வர் விஜய் பேசியது தொடர்பாக உச்ச நீதிமன்ற வழிகாட்டல் படி ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக் குழுவிட மும், சிபிஐயிடமும் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் முதல்வர் விஜய் குதிரைபேர ஊழலில் ஈடுபட்டு உள்ளார் என்பதை வைகோ அளித்த வாக்குமூலம் அடிப்படையில் ஏற்கனவே கடந்த 4-ம் தேதி ஆளுநரை சந்தித்து ஆதாரத்தோடு புகார் அளித்தோம்.

அதேபோல எம்.ஆர்.விஜயபாஸ்கரும் வெளிப்படையாகவே செய்தியாளர் கூட்டத்திலே, என்னை தவெகவில் வந்து சேரும்படி கேட்டுக்கொண்டார்கள், ஆகவேதான் நான் ராஜினாமா செய்கிறேன் என்று சொல்லி, எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவரும் சேர்ந்துவிட்டார்.

ஆக இதெல்லாம் குதிரைபேர ஊழலுக்கு தகுந்த ஆதாரங்கள் என்பதை சுட்டிக்காட்டி ஆளுநரிடத்தில் இன்று மீண்டும் ஒருமுறை திமுகவின் சார்பில் புகார் கொடுத்திருக்கிறோம்.

விஜய் பேசும் போது ‘கொத்து பரோட்டா’ என்றெல்லாம் கொச்சையாக பேசுகிறார்.

கரூர் விஜய பாஸ்கர், விராலிமலை விஜயபஸ்கர் ஆகிய இருவருமே நாங்கள் சாப்பிட்டுப் போட்ட இரண்டு இலை தான், அதை தவெகவில் இணைத்துக் கொண்டுள்ளனர் என அதிமுகவினரே விமர்சித்து உள்ளனர். ஆகவே எச்சில் இலையை வைத்து ஒரு விழா நடத்துகிறார்.

அதில் ஏற்கனவே வெளியிட்ட கரூர் அறநிலையத்துறை நிலம் தொடர்பான அரசாணையை, ஏதோ இவரிடம் கோரிக்கை வைத்து அதன் பிறகு வெளியிடுவது போல ஒரு நாடகத்தை நடத்தி காட்டியுள்ளார்.

இந்த நாடகம் நடந்தது 10-ம் தேதி. ஆனால் 9-ம் தேதியே அதற்கான அரசாணை போடப்பட்டுவிட்டது. இது எவ்வளவு பெரிய பித்தலாட்டம் எவ்வளவு பெரிய நாடகம்.

ஆக இப்படிப்பட்ட நாடகங்களை இவர்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இதற்கெல்லாம் முடிவுகட்டுகிற வகையில் திமுக நடவடிக்கை எடுக்கும் என்பதை தெரிவித்து கொள்கிறேன்.

குதிரை பேர புகாரின் பேரில் ஆளுநர் நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் நீதிமன்றத்தை நாடுவோம்” என்று தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *