சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா ஏற்பு விவகாரம்: பேரவைச் செயலர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு!!

சென்னை:
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜய பாஸ்கர் ஆகியோர் ராஜினாமா செய்ததை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுக்கு பதிலளிக்க, சட்டப்பேரவை செயலாளருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விராலிமலை மற்றும் கரூர் தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்எல்ஏ-கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர், தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து, தவெகவில் இணைந்துள்ளனர்.

இதனிடையே, அவர்களின் ராஜினாமாவை ஏற்று சபாநாயகர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதில், தகுதி நீக்க நடவடிக்கை நிலுவையில் இருக்கும் போது, இருவரின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்றுக்கொண்டது தவறானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சபாநாயகர், மனதை செலுத்தாமல் இயந்திர தனமாக முடிவெடுத்துள்ளதால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

சபாநாயகரின் முடிவு அரசியல் சாசனம் மற்றும் இயற்கை விதிகளுக்கு எதிரானது எனவும் இந்த மனு மீது இறுதி முடிவெடுக்கும் வரை விராலிமலை மற்றும் கரூர் தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்ட விவகாரத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, சட்டமன்ற செயலாளர் மற்றும் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே நான்கு எம் எல்.ஏக்கள் ராஜினாவை ஏற்றதை எதிர்த்த வழக்குகளுடன், இந்த இரு வழக்குகளையும் சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஜூலை 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *