சென்னை:
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
2016-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள உப்பூரில் சுமார் 1,600 மெகாவாட் திறன் கொண்ட அனல்மின் திட்டத்தை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.
அதற்குப் பிறகு 2021-ல் பல்வேறு காரணங்களைக் காட்டி இத்திட்டம் செயல்படுத்தபடாமல் கைவிடப்பட்டது.
மேலும், இத்திட்டத்தால் உள்ளூர் வாழ்வாதார நீர்நிலைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்கள்.
அதுமட்டுமல்லாமல் இத்திட்டத்துக்கான நிலம் கையகப்படுத்து வதிலும் தொய்வு ஏற்பட்டது.
ஆகவேதான், இத்திட்டம் முழுமையாக கிடப்பில் போடப்பட்டதாக கூறப்பட்டது. அதைத் தொடர்ந்து இத்திட்டம் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடிக்கு மாற்றம் செய்யப்பட்டது.
சுமார் ரூ.5,847 கோடி வரை செலவிடப்பட்ட உப்பூர் மின் திட்டத்தை தவெக அரசு செயல்படுத்த முழுமுயற்சி செய்ய வேண்டும்.
இத்திட்டத்துக்கு தடையாக இருக்கும் காரணங்களை ஆய்வுசெய்து, சுமுகத் தீர்வு காண பொதுமக்கள், அதிகாரிகள் அடங்கிய ஆய்வுக் குழுவை அமைக்க வேண்டும்.
இந்த மின் திட்டம் நிறைவேற்றப்பட்டால், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள மின் பற்றாக்குறையை ஓரளவு சமாளிக்க முடியும். மேலும், பலருக்கு வேலைவாய்ப் பும் கிடைக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.