திருநெல்வேலி/ தூத்துக்குடி:
தவெகவுக்கு மக்கள் மீதும் ஜனநாயகத்தின் மீதும் அக்கறை இல்லை என திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. விமர்சித்துள்ளார்.
தமிழக முதல்வர் விஜய் குறித்து ஒருமையிலும், மிரட்டும்விதமாகவும் பேசியதாக விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவரை, கனிமொழி எம்.பி. முன்னாள் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன் உள்ளிட்டோர் சந்தித்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் கனிமொழி கூறியதாவது: பாளையங்கோட்டை சிறைச்சாலை திமுகவுக்கு புதிதல்ல.
ஏற்கெனவே முன்னாள் முதல்வர் கருணாநிதியும் இந்த சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். எனவே, திமுகவினர் இந்த சிறைக்கு வந்தால் அதை பெருமையாகத்தான் கருதுவார்கள். அச்சுறுத்தல்கள், பொய் வழக்குகள், கைது போன்றவற்றுக்கு திமுகவினர் அஞ்சமாட்டார்கள்.
தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. தினந்தோறும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன.
ஸ்ரீவைகுண்டம் தொகுதி எம்எல்ஏ மீது பெண்கள் குற்றச்சாட்டுகளை கூறிய நிலையிலும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால், முதல்வரை தவறாக பேசியதாக எதிர்க்கட்சியினரை சிறையில் அடைக்கும் நிலை உருவாகியுள்ளது.
தவெகவுக்கு ஜனநாயகத்தின் மீதும், மக்கள் மீதும் அக்கறை இல்லை. காவல்துறையை பயன்படுத்தி எதிர்க்கட்சிகளை அரசு அடக்க முயற்சிக்கிறது. முதல்வராக ஸ்டாலின் இருந்த போது, தவெக எவ்வளவோ விமர்சனங்களை செய்திருந்தது.
விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளும் அவரது மனப்பக்குவம், தவெகவுக்கு இல்லை.
யாருக்கு பயந்து அரசியல் செய்தார்களோ, அதே நிலையில்தான் அவர்கள் செயல்படுகிறார்கள். பாஜக பெயரைக் கூட சொல்வதற்கு தயக்கம் காட்டுகிறார்கள்.
டெல்லியில் மாணவர்கள் போராட்டம் எப்படி கையாளப்படுகிறதோ, அதேபோன்று தமிழகத்திலும் தவெக செயல்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பாஜகவுடன், திமுக கூட்டணி சேருமா என்ற கேள்விக்கு கனிமொழி பதிலளித்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக தனது கொள்கைகளில் இருந்து ஒருபோதும் பின்வாங்காது.
பாஜகவுடன் இணைகிறது என்ற வதந்திகளுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை. அதுபோல், எந்தக் காலத்திலும் அதிமுகவும் திமுகவும் அரசியல் ரீதியாக நெருங்கியதில்லை.
நீட் தேர்வுக்கு திமுக தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மாணவர்களின் போராட்டத்தை ஒடுக்குவதற்காக பாஜக வன்முறையை கட்டவிழ்த்து விடுகிறது. இதை திமுக ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. இவ்வாறு தெரிவித்தார்.
இதனிடையே, மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்ட நிலையில் அவர் சார்பில் ஜாமீன் கோரி அவரது வழக்கறிஞர்கள் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனு விசாரணைக்கு ஏற்கப்பட்டது.
இதன் மீதான விசாரணை இன்று (ஜூலை 22) நடைபெறுவதாக ஆன்லைனில் பட்டியலிடப்பட்டுள்ளது. மார்க்கண்டேயனுக்கு ஜாமீன் கிடைக்குமா என்பது இன்று தெரியவரும்.