இன்று முதல் நான் அரசியல் துறவரம் பூணுகிறேன்; 88-வது பிறந்த நாளில் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பு!!

திண்டிவனம்:
இன்று முதல் அரசியல் துறவறம் பூணுவதாக தனது 88வது பிறந்த நாளில் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

ராமதாசின் 88வது பிறந்த நாள் விழா, திண்டிவனத்தை அடுத்த கோனேரிக்குப்பம் பகுதியில் அமைந்துள்ள சரஸ்வதி கல்லூரியில் நடைபெற்றது.

இதில், ராமதாஸின் மனைவி சரஸ்வதி, மகன் அன்புமணி, மருமகள் சவுமியா அன்புமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ராமதாஸ், “இன்று எனக்கு 88 ஆவது வயது ஆரம்பமாகிறது. இந்த தருணத்தில் நான் ஒரு நல்ல செய்தியை உங்களுக்கு சொல்ல விரும்புகிறேன்.

இன்று முதல் நான் அரசியல் துறவரம் பூணுகிறேன். அரசியல் துறவறம் என்று சொன்னால், அரசியலே பேச மாட்டேன், அரசியலுக்கு வழிகாட்ட மாட்டேன். வருபவர்களைப் பார்ப்பேன். நலம் விசாரிப்பேன். அவ்வளவுதான்.

அந்த வகையில் அரசியலில் நான் தலையிடமாட்டேன். அதை அன்புமணி பார்த்துக்கொள்வார். அவரது துணைவியாரும் அவருக்கு துணையாக இருப்பார். நாங்களும் துணையாக இருப்போம்.

என்னைப் பார்க்க வருபவர்கள் நலம் விசாரிக்க வரலாம். அரசியல் பேசுவதற்கு ஏதும் இல்லை. ஏனென்றால், நான் இன்றிலிருந்து அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன்.

இந்த கல்விக் கோயில் மேலும் சிறப்பாக மிகப்பெரிய அளவில் வளர நீங்கள் அனைவரும் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அதுவே நீங்கள் எனக்கு செலுத்தும் காணிக்கையாக கருதுவேன். அந்த வகையில் இந்த மனநிறைவோடு, இந்த வளாகங்களை திறந்து வைத்திருக்கிறோம்.

சரஸ்வதி அம்மையார் போட்ட அந்த விதை இன்று மிகப்பெரிய ஆலமரமாக வளர்ந்திருக்கிறது. இன்று நாம் அவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறோம்.

உங்களோடு நீண்ட நேரம் பேச வேண்டும் என்று விரும்பினாலும், தலைச்சுற்றல் வியாதி இன்றும் எட்டிப்பார்க்கிறது.

ஆனாலும், அதை சமாளித்துக்கொண்டு உங்களைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் நான் இங்கு வந்திருக்கிறேன்.

உங்களுக்கும் எனக்கும் உள்ள உறவு எப்போதும் மாறாது. அது நீடித்துக்கொண்டே இருக்கும்.

என்னைப் பார்க்க வாருங்கள். ஆனால், தொந்தரவு செய்யாதீர்கள்.” என தெரிவித்தார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *