பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் நிலத்தை விற்றவர், வாங்கியோர் உட்பட 4 பேர் கைது!!

பழநி:
பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நில மோசடி வழக்கில் நிலத்தை விற்றவர், வாங்கியோர் உட்பட 4 பேரை சிபிசிஐடி போலீஸார் இன்று (புதன்கிழமை) அதிகாலை கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் பழநி அடிவாரத்தில் பூங்கா சாலையில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு சொந்தமான 1.40 ஏக்கர் நிலம் பழநி தேவஸ்தானத்துடன் இணைத்து நீதிமன்றங்களால் உத்தரவிடப்பட்டன.

இதையடுத்து, பல ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்த நிலத்தை மீட்டு, பழநி முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக இலவச வாகன நிறுத்தம் அமைத்து, பயன்பாட்டில் உள்ளது. ரூ.100 கோடி மதிப்பிலான இந்த நிலத்தை ரூ.2 கோடிக்கு மோசடியாக பதிவு செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

கடந்த ஜூலை 6-ம் தேதி பொறுப்பு வகித்த சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சட்ட விரோதமாக தனி நபர்களுக்கு பத்திரப் பதிவு செய்து கொடுத்தார்.

இதையடுத்து, சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்ற திருப்புகழ் சுவாமிகள், முருகதாஸ் சுவாமிகள் அண்ட் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளையைச் சேர்ந்த முருகதாஸ், நிலத்தை வாங்கிய உடுமலைப்பேட்டை அடுத்த பாப்பான்குளத்தை சேர்ந்த வெள்ளைத்துரை, பழநி டி.கே.என்.புதூரை சேர்ந்த சேதுபதி உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்டப் பதிவாளர் சசிகலா ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது.

இந்த முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் தேவஸ்தானம் மற்றும் பத்திரப் பதிவு அலுவலகத்தில் விசாரணை நடத்தி ஆவணங்களை ஆய்வு செய்தனர்.

இதேபோல், பதிவுத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள உயர்நிலைக் குழுவை சேர்ந்த கூடுதல் பதிவுத்துறை தலைவர் சுதா மல்யா, உதவி பதிவுத்துறை தலைவர் பூங்கொடி, சென்னை மாவட்ட பதிவாளர் கண்ணன் ஆகியோர் பழநி பதிவாளர் அலுவலகத்தில் விசாரணை நடத்தி, அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.

இந்நிலையில், நேற்று (ஜூலை 28) தண்டபாணி சுவாமிகள் மடத்துக்கு நிலத்தை தானமாக வழங்கிய, பழநி பாலசமுத்திரத்தை சேர்ந்த குப்புசாமி மணியக்காரரின் வாரிசுகள், மூலப்பத்திரத்தை சிபிசிஐடி போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, இன்று (புதன்கிழமை) அதிகாலை நிலத்தை விற்ற அறக்கட்டளை நிர்வாகி விழுப்புரத்தை சேர்ந்த முருகதாஸ், நிலத்தை வாங்கிய உடுமலைப்பேட்டை அருகேயுள்ள பாப்பான்குளத்தை சேர்ந்த வெள்ளைத்துரை, பழநி டி.கே.என்புதூரை சேர்ந்த சேதுபதி, சாட்சி கையெழுத்திட்ட பழநியை சேர்ந்த அன்வர்தின் ஆகிய 4 பேரை சிபிசிஐடி போலீஸார் கைது செய்தனர்.

தொடர்ந்து வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *