மண்டாடி படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு ; பாடலாசிரியர் ஜெயஸ்ரீ மதிமாறன் நெகிழ்ச்சி!!

சென்னை:
சூரியின் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘மண்டாடி’ படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், தான் பெருமையாக உணர்வதாக பாடலாசிரியரும், இயக்கு நரின் மனைவியுமான ஜெயஸ்ரீ மதிமாறன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரியின் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மண்டாடி’ படம் இன்று (செப்.10) வெளியாகி உள்ளது.

ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருக்கும் மண்டாடி படத்தில் சூரியுடன் மஹிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பால சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் படத்துக்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. இது குறித்து பாடலாசிரியரும், மதிமாறன் புகழேந்தியின் மனைவியுமான ஜெயஸ்ரீ தனது எக்ஸ் தள பக்கத்தில் நெகிழ்ச்சிப் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், ‘நான் இன்னும் நடுங்கிக் கொண்டிருக்கிறேன், இன்று நடந்தவற்றைப் புரிந்துகொள்ளவும் உள்வாங்கிக் கொள்ளவும் முயல்கிறேன்.

திரையரங்குகளில் ‘மண்டாடி’ படத்துக்கு நீங்கள் காட்டிய அன்பு அளவிட முடியாதது.

ஒவ்வொரு கணமும் நாங்கள் ஒன்றிணைந்து போராடிய, ஒருவருக்கொருவர் உறுதுணை யாக நின்ற, கடினமான காலங்களை சேர்ந்து கடந்த நாட்களுக்கு என்னை மீண்டும் அழைத்துச் சென்றன. அந்த நாட்களின் நினைவுகள் என் கண்முன் நிழலாடின.

நான் அழுதேன், கை தட்டினேன், சத்தமாக கத்தினேன். அவனைக் கட்டிக்கொண்டேன். இந்த உணர்வுகளுக்கு மத்தியில் நான் அளவற்ற பெருமையும் கொண்டேன்.

பொறுமை, விடாமுயற்சி, நம்பிக்கை எல்லாம் ஒருவரை வலிமையாக்கி எவ்வளவு உயரத்துக்கு கொண்டு செல்லும் என்பதற்கு அவர் ஒரு நிஜ உதாரணம்.

உலகின் எல்லைகளைக் கடந்து நான் உன்னை நேசிக்கிறேன். கடினமான காலக்கட்டங்களை நாம் ஒன்றாக கடந்து வந்தோம்.

இப்போது இந்த வெற்றியில், சந்தோஷத்தில், அழகான தருணத்தில் ஒன்றாக திளைப்போம்.

இப்பவும் சொல்றேன்… மதிமாறன் நீ சொல்ற இடத்துல இருக்க நாங்க கேட்கிற இடத்துல இருக்கோம்.

ஒன்றாக போராடியதில் இருந்து ஒன்றாக கொண்டாடுவது வரை இது மிகவும் சிறப்பான ஒன்று’ என உணர்வுப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *