சென்னை:
தேர்தல் ஆணையத்தில் திமுக அளித்த புகாரைத் தொடர்ந்து, கொளத்தூர் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங் களை சரிபார்க்கும் பணி நேற்று தொடங்கியது.
சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபுவிடம் மு.க.ஸ்டாலின் 8,795 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
இதையடுத்து, கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 14 வாக்குச் சாவடிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று திமுக சார்பில் தேர்தல் ஆணையத் திடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் தேர்தலுக்குப் பிறகு ‘சீல்’ வைக்கப்பட்டு சிந்தாதிரிப் பேட்டையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் முன்னிலையில் திறக்கப்பட்டு சரிபார்க்கும் பணிதொடங்கியது.
இந்த ஆய்வின்போது திமுக சார்பில் என்.ஆர்.இளங்கோ, சட்டத்துறை துணை செயலாளர் சந்துரு ஆகியோரும், தவெக சார்பில் வழக்கறிஞர் அருண் மற்றும் வி.எஸ்.பாபுவின் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் கூறியதாவது:
தேர்தலுக்குப் பிறகு வேட்பாளர் அளித்த புகாரின்அடிப்படையில், கொளத்தூர் தொகுதியில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள 14 வாக்குச்சாவடிகளின் இயந்திரங்கள் ஆய்வு செய்யப்படுகின்றன.
வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் முதலில் அந்தந்தக் கட்சி பிரதிநிதிகளிடம் காண்பிக்கப்படும். அதன்பிறகு, பதிவான வாக்குகளை முழுமையாக அழித்துவிட்டு மீண்டும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும்.
இந்த நடைமுறை இயந்திரத்தின் நம்பகத் தன்மையை பரிசோதனை செய்வதற்காக மட்டுமே. மேலும், இந்த ஆய்வுப் பணிகள் தினம் 2 வாக்குச்சாவடிகள் என அடுத்த 7 நாட்கள் நடைபெறவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக திமுக வழக்கறிஞர் அணி செயலாளர் என்.ஆர்.இளங்கோ வன் கூறும்போது “கொளத்தூர் தொகுதியில் உள்ள 14 வாக்குச்சாவடி மையங்களில் சில சந்தேகங்கள் இருந்ததன் அடிப்படையில் நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம்.
தற்போது வாக்குப்பதிவு இயந்திரத்தை சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது” என்றார்.
இதற்கிடையே, கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட மு.க.ஸ்டாலின் தனது வேட்புமனுவில், திமுக அறக்கட்டளையின் ரூ.2.27 கோடி சொத்து விவரங்களை மறைத்ததாக கூறி தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் சிவஞான சம்பந்தம், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், ‘இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தனிநபர் புகார்தான் அளி்க்க முடியும்’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ‘அறக்கட்டளை சொத்துகள் தனிநபர் சொத்துகள் அல்ல. எனவே இந்த வழக்கில் எந்த நோட்டீஸும் பிறப்பிக்க முடியாது’ என்றனர்.
இதனால், வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் கூறியதால், வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.