தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக சட்டப் பேரவையில் இன்று முதல்வர் விஜய் தனித் தீர்மானம் !! பேசியது என்ன?

சென்னை:
தொகுதி மறுவரையறைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆக.12) முதல்வர் விஜய் தனித் தீர்மானம் கொண்டு வந்தார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து ‘தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை’, ‘நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ உள்ளிட்டவற்றை வலியுறுத்தி தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன.

இந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவை கூடியதுமே, தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் விஜய் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார்.

தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைக்க வேண்டும், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை காலதாமதமின்றி, தற்போதுள்ள 543 தொகுதிகளின் அடிப்படையிலேயே 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துவதாக முதல்வர் விஜய் கூறினார்.

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பேசியதாவது: தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையானது கடந்த 50 ஆண்டுகளாக 1971-ஆம் ஆண்டினுடைய மக்கள்தொகை கணக்கெடுப்பு புள்ளி விவரங்களின்படி நிர்ணயிக்கப்பட்டு தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகிறது.

ஏப்ரல் 2026-ல் நாடாளுமன்றத்தில் கடந்த 50 ஆண்டு கால தொகுதி மறுவரையறை தடையை நீக்கவும், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்திடவும், மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 550-லிருந்து 850 ஆக அதிகரிக்கவும் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா தோல்வியடைந்தது.

இந்நிலையில் மீண்டும் அரசியலமைப்பு சட்ட திருத்த மசோதா கொண்டுவரப்படவுள்ளதாகத் தெரிகிறது.

அதன்படி, 1971-க்கு பிறகு உள்ள எந்த மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு தொகுதி மறுவரை யறை செய்தாலும், மக்கள் தொகையை சிறப்பாகக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் நிரந்தரமாகப் பாதிக்கப்படும் என்பதே நிதர்சனமான உண்மை.

ஒன்றிய அரசு அளித்த உறுதியின்படி மக்கள்தொகை கட்டுப்பாட்டுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி நல்ல பொருளாதார வளர்ச்சி கண்டு, நல்ல சுகாதாரம், மக்கள் நலத் திட்டங்களை மேற்கொண்டு வரும் எந்த ஒரு மாநிலமும் தொகுதி மறுவரையால் பாதிக்கப்படாமல் பார்த்துக்கொள்வது ஒன்றிய அரசின் தலையாய கடமையாகும்.

எனவே, தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக் கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைப்பதற்கும், மாநிலங்களுக்கு இடையேயான எண்ணிக்கைப் பகிர்வை நிரந்தரமாக வைக்கவும், மேலும், தற்போது மக்களவை மாநிலங்களவையினுடைய விகிதம் 2.2:1 என்ற அளவிலேயே நிலைநிறுத்த வேண்டும்.

அதேவேளையில், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை காலதாமதமின்றி, தற்போதுள்ள 543 தொகுதிகளின் அடிப்படையிலேயே 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை, கீழ்க்கண்ட தீர்மானங்களை ஒருமனதாக நிறைவேற்றுகிறது.

  1. நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.
  2. மாநிலங்களுக்கிடையேயான விகிதாச்சார பிரதிநிதித்துவம் தற்போதுள்ள அளவிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.
  3. வரவிருக்கும் மக்களவை தேர்தலிலும், அதன் பிறகு சட்டமன்றப் பொதுத்தேர்தல்களிலும் மூன்றில் ஒரு பங்கு தொகுதி ஒதுக்கீட்டுப் பலனைப் பெண்கள் பெறுவதை உறுதி செய்யவேண்டும் என ஒன்றிய அரசை தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை ஒருமனதாக வலியுறுத்துகிறது. இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.

இதனைத் தொடர்ந்து தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் கொண்டுவந்த தனித் தீர்மானத்தின் மீது சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசி வருகின்றனர்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *