மேட்டூர் அணையில் இருந்து நீர்த் திறப்பு செய்யாமல், ரூ.134 கோடிக்கு சிறப்பு தொகுப்பு என்ற பெயரில் மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது – எடப்பாடி பழனிசாமி கண்டனம்!!

சென்னை:
“மேட்டூர் அணையில் இருந்து நீர்த் திறப்பு செய்யாமல், ரூ.134 கோடிக்கு சிறப்பு தொகுப்பு என்ற பெயரில் மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள சமுக வலைதளப் பதிவில், “ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12 அன்று திறக்கப்படும் மேட்டூர் அணை நீர், இவ்வாண்டு இன்றைய தினம் திறக்கப்படாததால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சிக்கும் கவலைக்கும் ஆளாக்கியுள்ளது.

குறுவை சாகுபடி மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர்த் திறப்பை பெரிதும் நம்பி இருப்பதால், இந்த நீர் வெளியீடு என்பது மிகவும் முக்கியமானது.

ஏற்கெனவே இந்த அரசு, விவசாயப் பயிர்க் கடன் என்ற பெயரில் 10,000 கோடி ரூபாய்க்கும் மேற்பட்டு இருக்கும் கடன் தொகைகளை சொன்னபடி தள்ளுபடி செய்யாமல், கடுகளவுக் கடனை மட்டும் அடைப்பதாக கூறி விவசாயிகளை ஏமாற்றி, அவர்களை போராட்டக் களத்திற்கு தள்ளிவிட்டது.

தற்போது நீர்த் திறப்பு செய்யாமல், ரூ.134 கோடிக்கு சிறப்பு தொகுப்பு என்ற பெயரில் மற்றுமொரு ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

மும்முனை மின்சாரம் ஏற்கனவே விவசாயிகளுக்கு 24 மணி நேரம் அஇஅதிமுக அரசின் அறிவிப்பின்படி வழங்கப்பட்டு வருகிறது. அதை தற்போது 18 மணி நேரமாக குறைத்து அறிவித்துள்ளது அரசு.

ஏற்கனவே அறிவிக்கப்படாத மின்வெட்டால் மாநிலம் முழுக்க மின்சாரம் இல்லாததால் பம்பு செட்டுகள் இயக்க முடியாத நிலை வேறு உள்ளது.

இந்நிலையில், விவசாயிகளின் வலிகளை, வேதனைகளை கொஞ்சம் கூட புரியாமல் இன்றைய பொய்க்கால் குதிரை அரசு ஒரு வெற்று ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

விவசாயிகள் வாழ்வாதாரம் சம்மந்தப்பட்ட விஷயமான இதன் தீவிரத்தை உணர்ந்து, மேட்டூர் அணையில் இருந்து நீர் திறந்து கடைமடை வரை சென்றடைவதற்கான அனைத்து நடவடிக் கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என இந்த அரசை வலியுறுத்து கிறோம்,” என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *