புதுச்சேரி:
புதுச்சேரியில் தனி நபர் வருமானம் ரூ.3.06 லட்சமாக உயர்ந்துள்ளதாக முதல்வர் ரங்கசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் இன்று சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. முதல்வர் ரங்கசாமி பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றார்.
பின்னர் முதல்வர் ரங்கசாமி உரையாற்றியதாவது: கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில், மக்கள் விரும்பும் பல நலத்திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. புதுச்சேரி மக்களின் ஆதரவோடு மீண்டும் ஒரு பொற்கால ஆட்சியை வழங்குவதற்கு, ஆக்கப்பூர்வமான பல வளர்ச்சி பணிகளை எனது அரசு மேற்கொண்டுள்ளது.
புதுச்சேரியில் தனி நபர் வருமானம் ரூ.3 லட்சத்து 6 ஆயிரத்து 119 ஆக உயர்ந்துள்ளது. பால் உற்பத்தியை பெருக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, ரூ.112 கோடி திட்ட மதிப்பீட்டில் நாளொன்றுக்கு 2 லட்சம் லிட்டர் கையாளும் திறன் கொண்ட முழுமையான தானியங்கி மற்றும் கணினி மயமாக்கப்பட்ட புதிய பால் பதப்படுத்தும் தொழிற்சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.
இதில் தேசிய பால்வள வளர்ச்சி திட்ட பங்காக ரூ.46.27 கோடியில் முதல் தவணையாக ரூ.13.88 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து ரூ.34.35 கோடியில் ஐஸ்கிரீம் உற்பத்தி தொழிற்சாலை நிறுவும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம் ஐஸ்கிரீம் தொழிற்சாலையின் உற்பத்தி திறன் நாளொன்றுக்கு 10,000 லிட்டரிலிருந்து 20,000 லிட்டராக விரிவுபடுத்தப்பட உள்ளது.
புதுச்சேரி, காரைக்காலை சேர்ந்த 6,200 பால் வழங்கும் உற்பத்தி யாளர்களுக்கு ரூ.11.66 கோடி மானியம வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீனவ இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் கப்பல் வழிகாட்டி படிப்பு, மரைன் பிட்டர் போன்ற சிறப்பு பயிற்சிகளுக்கு விண்ணப்பங்கள் கோராப்பட்டுள்ளன.
மேலும், சென்டாக் மூலம் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உயர்க்கல்வி பயிலும் மீனவ மாணவர்களுக்கான முழு கல்வி கட்டணம் மற்றும் இதர கட்டணங்களை அரசே செலுத்துவதற்கான விண்ணப்பங்களும் கோராப்பட்டுள்ளன.
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வந்த ரூ.1000 நிதியுதவி 2026 ஜனவரி முதல் ரூ. 2500 ஆக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் 65 ஆயிரம் குடும்பத் தலைவிகள் பயனடைந்து வருகின்றனர்.
இந்திரா காந்தி சதுக்கம் மற்றும் ராஜீவ் காந்தி சதுக்கம் ஆகியவற்றை இணைக்கும் மேம்பாலம் ரூ.483.51 கோடி மதிப்பீட்டில் அமைக்க மத்திய அரசு சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம் மூலம் பணியாணை வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
ஆசிய வளர்ச்சி வங்கியின் ரூ.4,750 கோடி கடனுதவியுடன், புதுச்சேரியின் நான்கு பிராந்தியங்களுக்கும் குடிநீர் திட்டம், சாலை வசதிகள், கழிவுநீர் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் நெரிசலை சமாளிக்கும் கட்டமைப்பு மற்றும் கடல்நீரை குடிநீராக்கும் 50 கொள்ளளவு கொண்ட உப்பு நீக்கும் ஆலைப் பணிகளை அடுத்த ஐந்து ஆண்டுகளில் முடிக்கும் திட்டத்துக்கு அனுமதி கிடைத்துள்ளது.
இதில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தை மேற்கொள்வதற்குத் தேவையான ஆலோசனை மற்றும் திட்ட அறிக்கை தயாரிக்க அறிவுச்சேவை நிறுவனம் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விரைவில் ரூ.500 கோடியில் இப்பணி தொடங்கப்படும். இதுதவிர ரூ.440.52 கோடி மதிப்பீட்டில் ஐந்து பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.
பொதுப்பணித்துறையில் நேரடி நியமனம் மூலம் 74 இளநிலைப் பொறியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இத்தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமரின் சூரிய வீடு மின்சாரத் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் மேற்கூரைகளில் சூரிய மின் உற்பத்தி பேனல்கள் அமைக்க ரூ.78 ஆயிரம் வரை மத்திய அரசு மானியம் வழங்குகிறது.
இந்த மானியத்துடன் கூடுதலாக ஒரு கிலோவாட்டுக்கு ரூ.10 ஆயிரம் வீதம் 3 கிலோ வாட்டுக்கு புதுச்சேரி அரசு மானியம் வழங்கி வருகிறது. இதுவரை 4,896 வீடுகளில் சூரிய மின் பேனல்கள் அமைக்கப்பட்டு ரூ.31.57 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
2025-26-ம் நிதியாண்டில் போக்குவரத்துறை ரூ.200 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. நடப்பு நிதியாண்டில் இதுவரை ரூ.59.09 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
மத்திய அரசின் மூலதன முதலீட்டிற்கான மாநிலங்க ளுக்கான சிறப்பு உதவித் திட்டத்தின்கீழ் 132 புதிய பேருந்து நிழற்குடைகள் அமைக்க பொதுப்பணித்துறையால் மின்னணு ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும் நிலையில் உள்ளன.
புதுச்சேரிக்கென மாநில அளவிலான கடல்வழி வாணிப பெருந்திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
பிரதமரின் ஏக்தா மால் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து, முதற்கட்டமாக கடந்த மே மாதம் ரூ.64.24 கோடியை விடுத்துள்ளது.
புதுச்சேரிக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
சுற்றுலா துறையை பொருளாதார வளர்ச்சியின் முக்கிய தூணாகக் கருதி பல்வேறு முன்னேற்றத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. தேர்தல் நேரத்தில் நாங்கள் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றிட உரிய நடவடிக்கைகளை அரசு எடுக்கும்.
குறிப்பாக, அனைத்து வீடுகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குதல், பெருகி வரும் போக்குவரத்து நெருக்கடியைச் சீராக்குதல், புதிய தொழிற்சாலைகளை வரவழைத்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினைப் பெருக்குதல், மழைக்காலத்தில் வெள்ள நீர் தேங்குவதைத் தடுத்தல் ஆகிய முக்கிய பிரச்சனைகளுக்குத் தீர்வு காணத் தொலைநோக்கு திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. இவ்வாறு முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
இதன் பின்னர், சிறப்பாக பணியாற்றிய காவலர்கள், பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்கிய அரசுத்துறைகள் மற்றும் சிறந்த மருத்துவ பணியாளர்களுக்கு பதக்கம் வழங்கி கவுரவித்தார்.
தொடர்ந்து பல்வேறு பிரிவினரின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
விழாவில் சட்டப்பேரவை தற்காலிக தலைவர் அன்பழகன், அமைச்சர்கள் நமச்சிவாயம், ராஜவேலு மற்றும் எம்எல்ஏக்கள், அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
முதலில் இசைக்கப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்து:
புதுச்சேரியில் அரசு விழாக்களில் முதலில் வந்தே மாதரம் பாடலும், பிறகு தேசிய கீதமும், கடைசியாக தமிழ்த்தாய் வாழ்த்தும் சமீப காலமாக இசைக்கப்பட்டு வந்தது.
இதற்கு தமிழ் அமைப்புகள், சமூக அமைப்புகளுக்கு மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு அரசு விழாக்களில் முதலிடம் தர வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலிலும், வந்தே மாதரம் பாடல் இரண்டாவதாகவும் இசைக்கப்பட்டது.
அதன் பிறகு முதல்வர் ரங்கசாமி தேசிய கொடி ஏற்றிய பிறகு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இதன் மூலம் சுதந்திரதின விழாவில் முதன்முறையாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.