புதுடெல்லி:
போதைப் பொருளற்ற பாரதத்தை உருவாக்குவதே எனது கனவு என ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தனது 137-வது மனதின் குரல் (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சியில், தொழில்நுட்பம், சமூக நடவடிக்கை, தொழில்முனைவு மற்றும் மக்கள் பங்கேற்பு மூலம் நாட்டின் அடித்தட்டு அளவில் மாற்றங்களை உருவாக்கி வரும் மனிதர்களையும் அவர்களின் முயற்சிகளையும் பாராட்டிப் பேசினார்.
மும்பையைச் சேர்ந்த கிருஷ்ணா சேஷாத்ரி என்பவர் இந்திய வரலாற்றை எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மேற்கொண்டு வரும் ஒரு புதுமையான முயற்சியை மேற்கோள்காட்டிப் பிரதமர் தனது மனதின் குரல் உரையைத் தொடங்கினார்.
பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள்: “வளர்ச்சியடைந்த இந்தியாவுக்குப் போதைப்பொருளற்ற இளைஞர்கள்” என்ற இயக்கம் நாடு முழுவதும் விரைவாக வேகமெடுத்து வருகிறது.
இதன் நோக்கம் மிகவும் தெளிவானது. போதைப்பொருளற்ற இளைஞர்கள், போதைப்பொருளற்ற இந்தியாவை உருவாக்குவதுதான் அது.
போதைப்பழக்கம் ஒரு நபரை மட்டும் சீரழிப்பதில்லை; அதன் விளைவுகளை முழு குடும்பம் மட்டுமின்றி சமுதாயமும் அனுபவிக்கிறது.
போதைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துபவர்களையும், மீண்டு வர உதவுபவர்களையும் மனதாரப் பாராட்டுகிறேன்.
ஆகஸ்ட் மாதத்தில் ஹர் கர் திரங்கா, தேசிய கைத்தறி தினம், வெள்ளையனே வெளியேறு இயக்க நினைவு தினம், பிரிவினை கொடுமைகள் நினைவு தினம், சுதந்திர தினம் மற்றும் தேசிய விண்வெளி தினம் எனத் தேசபக்தியின் பல்வேறு வண்ணங்களைக் காண முடியும்.
‘வந்தே மாதரம்’ பாடல் இயற்றப்பட்டு 150 ஆண்டுகள் நிறைவடைவது இந்த ஆண்டை மேலும் சிறப்புமிக்கதாக்குகிறது.
மலர் சாகுபடி
நாகாலாந்தின் ஃபெக் மாவட்டத்தைச் சேர்ந்த வைஷாலு புரோஜி என்ற பெண், கால் ஏக்கர் நிலத்தில் அறிவியல் பூர்வமாக 5,000-க்கும் மேற்பட்ட கிளாடியோலஸ் மலர்களைச் சாகுபடி செய்து சாதனை படைத்திருக்கிறார்.
மேலும், இந்தியாவில் அவகேடா பழச்சாகுபடி அதிகரித்து வருவதும் பாராட்டுக்குரியது. ஒடிசாவில் காடுகளின் பாதுகாப்பில் பெண்கள் கணிசமான பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.
இன்று நமது மகள்களின் கனவுகள் பூமியிலிருந்து விண்வெளி வரை பயணிக்கின்றன.
‘மிஷன் சக்திசாட்’ என்ற முயற்சியின் மூலம் 108 நாடுகளைச் சேர்ந்த 12,000 மாணவி மாணவர்கள் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொண்டு புதுமை படைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளனர்.
வங்காளத் திரையுலகின் புகழ்பெற்ற நடிகர் உத்தம் குமாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தும் இந்த நேரத்தில், வரவிருக்கும் ஜென்மாஷ்டமி, விஸ்வகர்மா பூஜை மற்றும் தீபாவளி பண்டிகைக் காலங்களில் உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவளிக்கும் (வோகல் ஃபார் லோக்கல்) இயக்கத்துக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.