உலக சாம்பியன்ஷிப் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ. 75 இலட்சம் காசோலையை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்!!

ஜப்பான் நாட்டில் நடைபெற்ற 2024 பாரா தடகள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற டி.மாரியப்பன் அவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக ரூ. 75 இலட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (11.6.2024) தலைமைச் செயலகத்தில், ஜப்பான் நாட்டில் நடைபெற்ற 2024 பாரா தடகள் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற திரு.டி.மாரியப்பன் அவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 75 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி, வாழ்த்தினார்.

விளையாட்டு துறையில் இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்கிடவும், அகில இந்திய அளவிலும், பன்னாட்டு அளவிலும் நடைபெறும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கு கொண்டு வெற்றி பெறும் வகையில் அவர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல், உயரிய ஊக்கத்தொகை வழங்குதல், விளையாட்டிற்கான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல் என பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது.

மேலும், மாநிலத்தில் அதிநவீன விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை பெருநிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நன்கொடையாளர்களிடமிருந்து நன்கொடை பெற்று “தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை”யை உருவாக்கியது, சர்வதேச விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்திட தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

பாராலிம்பிக் தடகளப் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் அவர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை வழங்குதல்

கடந்த மே மாதம் 17 முதல் 25 வரை ஜப்பான் நாட்டின் கோபில் (KOBE) நடைபெற்ற 2024 பாரா தடகள் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழ்நாட்டு வீரர் திரு.த.மாரியப்பன் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் 75 இலட்சம் ரூபாய்க்கான காசோலையினை உயரிய ஊக்கத் தொகையாக வழங்கி வாழ்த்தினார்கள்.

முன்னதாக, திரு. மாரியப்பன் அவர்களுக்கு 2019-ஆம் ஆண்டு ஐக்கிய அரேபிய எமிரேட்ஸ் நாட்டின் துபாயில் நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்காக 30 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, 2020-ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் டோக்கியோவில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக 2 கோடி ரூபாய்க்கான காசோலை, 2023-ஆம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய பாரா போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றதற்காக 30 இலட்சம் ரூபாய்க்கான காசோலை, தாய்லாந்து நாட்டில் நடைபெற்ற International Wheelchair and Amputee Sports Federation போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதற்காக 5 இலட்சம் ரூபாய்க்கான் காசோலை உயரிய ஊக்கத் தொகையாக தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *