ஈரோடு:
நேபாள வெள்ளத்தில் சிக்கி மாயமான பெற்றோரை 3 நாட்களாக தேடியும் தகவல் கிடைக்காததால், அவர்களது மகன் ஏமாற்றத்துடன் ஈரோடு திரும்பினார்.
ஈரோடு மாவட்டம் வெள்ளோட்டை அடுத்த கனகபுரத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (67). இவரது மனைவி கிருஷ்ணவேணி (56). இருவரும் ஈரோட்டில் உணவகம் நடத்தி வருகின்றனர்.
கடந்த 14-ம் தேதி, நாமக்கல்லைச் சேர்ந்த உறவினர்கள் 9 பேருடன் சென்னையில் உள்ள சுற்றுலா நிறுவனம் மூலம் நேபாள நாட்டின் காத்மாண்டுவுக்குச் சென்றனர். அங்கிருந்து பல்வேறு ஆன்மிகச் சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றனர்.
கடந்த 25-ம் தேதி காலை நடராஜனும், கிருஷ்ண வேணியும் தங்களது மகன் கவின்ராஜை செல்போனில் தொடர்புகொண்டு பேசினர்.
மறுநாள் காலை, அவர்கள் சுற்றுலா சென்ற நேபாளத்தின் வடக்கு எல்லையை ஒட்டிய ரசுவா மாவட்டத்தில் பெரு வெள்ளம் ஏற்பட்டது.
இதனால் அச்சமடைந்த கவின்ராஜ் தனது பெற்றோரைத் தொடர் புகொள்ள முயன்றபோது, அவர்களுடன் தொடர்பு கொள்ள முடிய வில்லை.
இதையடுத்து பதற்றமடைந்த கவின்ராஜ், கடந்த 27-ம் தேதி ஈரோட்டில் இருந்து புறப்பட்டு பெங்களூரு சென்று, அங்கிருந்து விமானம் மூலம் காத்மாண்டு சென்றார். =
அங்கு மருத்துவ முகாம்கள், ராணுவ முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 3 நாட்களாகத் தேடியும் பெற்றோர் குறித்த எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றத்துடன் அவர் ஈரோடு திரும்பினார்.
இதுகுறித்து கவின்ராஜ் கூறுகையில், ‘‘வெள்ளம் ஏற்பட்ட நாளன்று எனது பெற்றோர் மற்றும் அவர்களுடன் சென்ற குழுவினர் நேபாள எல்லைப் பகுதியில் உள்ள பாஸ்போர்ட் சரிபார்ப்பு அலுவலகக் கட்டிடத்தில் இருந்தனர்.
அப்போது ஏற்பட்ட பெருவெள்ளம் அந்தக் கட்டிடத்தைச் சூழ்ந்தது.
தற்போது அந்தக் கட்டிடத்தைச் சுற்றி 30 அடிக்கும் மேல் சகதியும், சேறும் சேர்ந்துள்ளதால் மீட்புப் பணி சவாலாக உள்ளது.
வெள்ளத்தில் மாயமானவர்கள் பட்டியலில் எனது பெற்றோரின் பெயர்களையும் நேபாள அரசு சேர்த்துள்ளது’’ என கண்ணீருடன் தெரிவித்தார்.