அத்தியாவசிய மருந்துகளுக்கு விலையேற்றம் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து நாடாளுமன்றத்தில் மதிமுக எம்.பி, துரை வைகோ கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு மத்திய அமைச்சர் பதில் அளித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக அத்தியாவசிய மருந்துகளின் விலையேற்றத்தால் சாதாரண எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதைக் கருத்தில்கொண்டு, மீண்டும் அக்டோபர் 24 அன்று சில அத்தியாவசிய மருந்துகளுக்கு விலையேற்றம் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து நான் கேள்வி எழுப்பியிருந்தேன்.
அதற்கு, அமைச்சர் திருமதி. அனுப்பிரியா பட்டேல் அவர்கள் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்திருந்தார்கள். அதன் விபரம் பின்வருமாறு..
எனது கேள்வி: அக்டோபர் 24 அன்று அத்தியாவசிய மருந்துகள் விலை ஏற்றத்தை அனுமதிக்கும் முன், மருந்துகள் தயாரிப்பு சாத்தியமற்றதாக மாறிவிட்டது என்ற மருந்து உற்பத்தியாளர்களின் கூற்றை National Pharmaceutical Pricing Authority (NPPA) தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் சரியான முறையில் விசாரித்ததா? விசாரித்திருந்தால், அதன் விபரங்களை தெரிவிக்கவும்.
விசாரிக்கவில்லை என்றால், அதற்கான காரணங்களையும் தெரிவிக்கவும் என்று நான் கேள்வி எழுப்பியிருந்த நிலையில்,இரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் திருமதி அனுப்பிரியா பட்டேல் அவர்களின் பதில்: ஆம் சார். மருந்து உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை Inter-Ministerial Committee (IMC) ஒருங்கிணைந்த அமைச்சக குழுவின் மூலம் பரிசீலிக்கப்பட்டது.
இதில், Central Drugs Standard Control Organisation (CDSCO) மத்திய மருந்து தர நிலைகள் கட்டுப்பாட்டு அமைப்பு, Director General of Health Services (DGHS) இயக்குநர் பொது சுகாதாரத்துறை மற்றும் National Pharmaceutical Pricing Authority (NPPA) தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
அப்போது, குறிப்பிட்ட மருந்துகளின் அத்தியாவசியம், அந்த மருந்துகள் எப்போதிலிருந்து விலை கட்டிப்பாட்டில் உள்ளது, கடந்த மூன்று ஆண்டுகளில் API விலைகளின் மாற்றம் என்ன, உற்பத்தியாளர்களிடமிருந்து அந்த மருந்துகள் நிறுத்தப்பட்டால் ஏற்படும் தட்டுப்பாடு ஆகிய அளவீடுகளில் பரிசீலனை செய்யப்பட்டு, விலை ஏற்றத்திற்காக அனுமதி கோரப்பட்ட 77 வகைகளில், 8 மருந்துகளின் 11 வகைகளுக்கு மட்டுமே விலை உயர்வுக்கான அனுமதி அளிப்பட்டது. இவ்வாறு அவரது பதில் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.