அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக தமிழ்நாட்டிலே கல்வி கட்டமைப்பு சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது – அமைச்சர் தங்கம் தென்னரசு!!

சென்னை,
தமிழக சட்டசபையில், 2025-26 ஆண்டிற்கான கூடுதல் செலவிற்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தின் போது அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து பேசியதாவது:-


நிதி பற்றாக்குறை ஏற்படுவதற்கான காரணங்களையும் மத்திய அரசு எவ்வளவு அளவுக்கு நம்மை வஞ்சித்து வருகிறது என்பதையும் உங்களிடம் விளக்குவது நிதி அமைச்சராக என்னுடைய கடமை. ஏறத்தாழ 14 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு 11.19 சதவீத இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது.

இது நாம் எதிர்பார்த்து திட்டமிட்டதை விட 2.2 சதவீதம் அதிகமான வளர்ச்சி. இந்த மகத்தான சாதனை முதல்-அமைச்சர் வழங்கிய ஒத்துழைப்பின் விளைவாக கிடைத்துள்ளது.

இதற்கு முன்பாக, முன்னாள் முதல்-அமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சிப் பொறுப்பில் 2010 – 2011-ம் ஆண்டில் இரட்டை இலக்கு பொருளாதார வளர்ச்சியை பெற்ற நாம் அதன்பிறகு நம்முடைய முதல்-அமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில்தான் இரட்டை இலக்கை பெற்றிருக்கிறோம்.

இதனால் 2030ல் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை எட்டுவதற்கு இது ஒரு மைல்கல்லாக அமைந்திருக்கிறது. நிதி பகிர்வில் தமிழ்நாட்டை மத்திய அரசு தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. உதாரணத்திற்கு கல்விக்கான நிதியை நாம் போராடி பெறும்வகையிலான சூழல் இருக்கிறது.

அரை நூற்றாண்டு காலத்திற்கு மேலாக தமிழ்நாட்டிலே கல்வி கட்டமைப்பு சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. பல்வேறு ஆட்சி அமைந்தாலும் கல்விக்கென ஒரு உறுதியான கட்டமைப்பை உருவாக்கி இருக்கக்கூடிய மாநிலம் தமிழ்நாடு.

ஆனால் ஒன்றிய அரசு ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்காக வழங்கக்கூடிய நிதியினை வழங்குவதற்கு தொடர்ந்து மறுக்கிறது.

அகில இந்திய அளவிலே பள்ளிக்கல்வியில் சிறந்த அமைப்பை தமிழ்நாட்டிலே உருவாக்கி இருக்கிறோம்.

ஆனால் ஒன்றிய அரசு ஏறத்தாழ 4,000 கோடி ரூபாய்க்கு மேலாக தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய நிதியை தர மறுத்து கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் நமக்கு வழங்கக்கூடிய 450 கோடி ரூபாய் பணத்தை மட்டுமே விடுவித்திருக்கிறது.

இந்த 4000 கோடி ரூபாய் நம்முடைய பிள்ளைகளுடைய படிப்பு, ஆசிரியர் சம்பளம், பள்ளிகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குதல் போன்றவற்றிக்கு வழங்கவேண்டியது.

இதையறிந்தும் மத்திய அரசு திட்டமிட்டு நிதியை விடுவிக்காததன் காரணமாக இந்த வளர்ச்சி பணிகள் முடங்கிப் போய் இருக்கிறது.

நிதியை முடக்கி வைத்திருந்தாலும் எந்த குழந்தையினுடைய படிப்பும் நிதி ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் நிற்கக்கூடாது என்ற உறுதியான நிலைப்பாட்டோடு மாநிலத்தினுடைய சொந்த நிதியை முதல்-அமைச்சர் வழங்கினார்.

மத்திய அரசாங்கம் நிதியை விடுவிக்காவிட்டாலும் மாநில நிதியில் இருந்து அவற்றுக்கு நிதியினை விடுவித்து தருவதால் தடையின்றி கல்வி பயில்கின்றனர்.

கல்வி என்பது நாம் விளையாடக்கூடிய அரசியல் களமல்ல, அது அரசியல் இயக்கங்கள் ஒன்றொன்றுக்கும் இருக்கக்கூடிய தார்மீகமான ஒரு பொறுப்பு. இதை உணர்ந்து இருக்கக்கூடிய காரணத்தால்தான் முதல்-அமைச்சர் மாநிலத்தினுடைய சொந்த நிலையில் இருந்து நிதி வழங்குகிறார்.

மத்திய அரசாங்கத்திலிருந்து நாங்கள் கேட்பது, நாங்கள் பெறக்கூடிய உதவியல்ல, ஏதோ எங்கள் மீது இரக்கப்பட்டு நீங்கள் தருவது உதவிகள் என்று எண்ணிவிடாதீர்கள், இது எங்கள் உரிமைக்குரல்.

இது எங்களுடைய உரிமைகளுக்காக நாங்கள் எழுப்பக்கூடிய குரல் என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். இந்த உரிமை போராட்டத்தில் எங்களுக்கான நீதியை நிலைநாட்டுவதில் நாங்கள் இறுதிவரை போராடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *