தருமபுரி:
“100 சதவீதம் திமுக கூட்டணியில் விசிக நீடிக்க முடியாமல் போனதற்கு திமுகதான் பொறுப்பு, திருமாவளவன் காரணம் அல்ல. காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணியிலிருந்து வெளியேற திமுகவே காரணம்” என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
தருமபுரியில் திருமண விழாவில் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “ 2026 தேர்தலுக்கு முன்பு திமுக கூட்டணியை உடைக்கவும், என்னை அக்கூட்டணியிலிருந்து வெளியேற்றவும் பல முயற்சிகள் நடந்தன.
அப்போது நம்மோடு இருந்த ஆதவ் அர்ஜுனா, “அடுத்த முதல்வர் திருமாவளவன் என தமிழகம் முழுக்க பிரச்சாரம் மேற்கொள்வதே என் திட்டம்” என்று கூறினார்.
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி, முதல்வர் திருமாவளவன் என பிரச்சாரம் மேற்கொள்வோம் என்றார்.
திராவிட அரசியலை வீழ்த்த பாஜக பல சதி முயற்சிகளை செய்கிறது, அதற்கு நாம் இரையாக கூடாது என்று நான் அவரிடம் கூறினேன்.
நாம் வெளியே வருவதால் திமுக கூட்டணி பலவீனமடைந்து, அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெற நாம் காரணமாகிவிடக் கூடாது என்று தொலைநோக்கு பார்வையோடு சிந்தித்தேன்.
பதவி ஆசை இருந்திருந்தால் நான் வேறு மாதிரி முடிவை எடுத்திருக்கலாம். திமுக கூட்டணியை காப்பாற்ற நான் பெரும் சிரத்தை எடுத்துக்கொண்டேன்.
எவ்வளவோ ஆசை காட்டியும் கூட்டணியை உடைக்க நான் அப்போது உடன்படவில்லை.
2026 தேர்தல் முடிவுக்கு பின்னர் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறும் முடிவை நாம் எடுத்தோமா?
அந்தக் கூட்டணியை காப்பாற்றும் முயற்சியை திமுகவால் எடுக்க முடியவில்லை என்பதுதான் உண்மை, இதை யாரும் விவாதிக்கவில்லை.
காங்கிரஸோடு நல்ல உறவைப் பேணிக் காத்திருந்தால், காங்கிரஸ் உடனே கூட்டணியிலிருந்து வெளியேறி யிருக்குமா?.
தொகுதிப் பங்கீட்டில் காங்கிரஸ், இடதுசாரிகளுடன் திமுகவின் உறவு, அணுகுமுறை ஆரோக்கியமானதாக இருந்ததா?
திடுமென கடைசி நேரத்தில் தேமுதிகவை கூட்டணிக்குள் சேர்த்தது, ஏற்கெனவே கூட்டணியில் இருந்த கட்சிகளுக்கு மகிழ்ச்சிகரமாக இருந்ததா?
நீண்டகாலம் திமுகவோடு பயணித்த கட்சிகளுக்கான தொகுதிகளை குறைத்து, திடுமென கூட்டணியில் இணைந்த கட்சிக்கு யாரும் எதிர்பாராத அளவு தொகுதிகளை தந்தபோது, ஏற்கெனவே இருந்த கட்சிகளுக்கு மகிழ்ச்சி அளித்திருக்குமா? நல்லுறவு, நல்லிணக்கத்தை கூட்டணி கட்சிகளுடன் பேணி பாதுகாக்கும் பொறுப்பு தலைமை தாங்கும் கட்சியிடம் தான் உள்ளது.
70 ஆண்டுகளாக கூட்டணியில் இருந்த ஐயுஎம்எல் ஏன் கூட்டணியில் இருந்து வெளியேறியது? மதிமுகவை சொந்த சின்னத்தில் நிற்க விடாதது கசப்பை ஏற்படுத்தாதா?.
கமல்ஹாசன் கட்சியை ஏன் அரவணைக்கவில்லை? தேர்தல் நேரத்தில் திமுக காட்டிய இறுக்கமான அணுகுமுறையே இந்த கூட்டணி உடைய காரணமாக இருந்தது.
கூட்டணிக் கட்சிகளுடன் நல்லிணக்கமான உறவை சிதைத்தது திமுக கையாண்ட அணுகுமுறைதான்.
100 சதவீதம் திமுக கூட்டணியில் விசிக நீடிக்க முடியாமல் போனதற்கு திமுகதான் பொறுப்பு, திருமாவளவன் காரணம் அல்ல. காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணியிலிருந்து வெளியேற திமுகவே காரணம்.
தவெகவை குறைத்து மதிப்பிட்டதற்கு திமுகவின் தவறான கணிப்புதான் காரணம்.
கரூர் சம்பவத்தில் விஜய் மீது வழக்கு போட நான் சொன்ன போது, ஏன் வழக்கு போடவில்லை.
வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வந்தார், அதனால் நெரிசல் அதிகமாகி உயிரிழப்புகள் ஏற்பட்டது என அவரை வழக்கில் சேர்த்திருக்க வேண்டாமா?
அப்போதே விஜய்யின் அரசியலை அம்பலப்படுத்தியிருக்க வேண்டாமா? அப்போது உங்களை கடுமையாக விமர்சித்த விஜய்யை ஏன் திமுக விமர்சிக்கவில்லை?
ஆனால் விஜய்யை ஆர்எஸ்எஸ் பெற்றெடுத்த பிள்ளை என நான் பேசினேன். அன்று அவர் மீது எனக்கு நம்பிக்கை இல்லை.
இன்று அவர் அதிமுக, பாமக, பாஜகவின் ஆதரவை கேட்காததால், அவருக்கு ஆதரவளித்தோம்.
தோற்றாலும் கூட்டணியிலேயே இருப்போம் என்ற அளவுக்கான நல்லுறவு திமுகவுடன் இருந்த கட்சிகளுக்கு இல்லை.
காங்கிரஸ் உடனே திமுக கூட்டணியிலிருந்து வெளியேற வெறும் பதவிதான் காரணமா? அங்கே நல்லிணக்கம் இல்லை என்பதுதான் முக்கியமானது.
காங்கிரஸ், இடதுசாரிகள் சென்ற பின்னர்தான் விசிக, தவெக கூட்டணியில் இணைந்தது. அப்போதும் வெளியில் இருந்தே ஆதரவு அளித்தோம்.
பதவி ஆசை இருந்திருந்தால் காங்கிரஸ் சென்ற உடனே நான் சென்றிருக்க முடியாதா? விஜய்யே தொடர்பு கொண்டு பேசிய போதே நான் சென்றிருக்க முடியாதா?
என்னை அமைச்சராக்குவதாக சொன்னபோதே இசைந்திருக்க முடியாதா? திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நீங்களே போட்டியிடுங்கள் என சொன்னபோதே ஏற்றிருக்க முடியாதா?
பின்னர் ஏன் அமைச்சரவையில் இடம்பெற்றோம் என்றால், ஒடுக்கப்பட்ட எளிய குடும்பத்தில் பிறந்த ஒருவரை அமைச்சராக்கும் வாய்ப்பை தட்டிப்பறிக்க கூடாது என்று நினைத்தேன்.
100 சதவீதம் கட்சிக்கு உண்மையாக பணியாற்றிய வன்னி அரசுக்கு இந்த வாய்ப்பை பெற்று தந்தோம். நாங்கள் அமைச்சரானதை திராவிட இயக்கங்கள் வாழ்த்தியிருக்க வேண்டாமா?
ஆனால் என் மீது அவதூறுகளை வீசுகிறார்கள். விசிக கூடாரம் காலியாகிவிட்டதாக அவதூறு பரப்பினார்கள்.
ஆனால் என் மீது மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை அசைக்க முடியாது” என்றார்.