பெரியார் அறிவுலகத்தில் நூல்கள் கொள்முதலில் நடந்த முறைகேடு விவகாரத்தில் உண்மையை கண்டறிய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும் – பழனிசாமி!!

திருப்பூர்:
“பெரியார் அறிவுலகத்தில் நூல்கள் கொள்முதலில் நடந்த முறைகேடு விவகாரத்தில் உண்மையை கண்டறிய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைக்க வேண்டும்” என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் அத்திக்கடவு – அவிநாசி திட்டத்தின் மூலம் பயன்பெறும் பெரியகுளத்தை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி இன்று பார்வையிட்டு மலர் தூவினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “கோவை, திருப்பூர் மாவட்ட விவசாயிகளின் நீண்டகாலக் கோரிக்கையான அத்திக்கடவு – அவிநாசி திட்டம், அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின்கீழ் 7 தடுப்பணைகளிலும் சுமார் 1.5 டிஎம்சி தண்ணீரைத் தேக்கிவைக்கும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு உபரிநீரைச் சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தடுப்பணைகளின் உயரம் அதிகரிக்கப்படும்.

உள்ளாட்சித் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல்களை முன்னிட்டு, கிராமப்புற விவசாயிகளின் வாக்குகளைப் பெறுவதற்காகவே தற்போது பயிர்க்கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு, சட்டம் – ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் நோக்கத்திலும் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

முதல்வர் விஜய்க்கு விவசாயிகள், பொதுமக்கள், தொழிலாளர்களின் பிரச்சினைகள் தெரிவதில்லை. அவர் யாரையும் நேரில் சந்தித்து அவர்களின் குறைகளைக் கேட்டறிவதும் இல்லை.

தவெக ஆட்சியில் பத்திரிகையாளர்கள், ஊடகத்தினருக்கு சுதந்திரம் இல்லை. உண்மைச் செய்திகளை வெளியிட்டால் மிரட்டல்கள் அதிகரித்து வருகின்றன.

காவல் துறை அதிகாரிகளால் தங்களது கடமையை சுதந்திரமாகச் செய்ய முடியவில்லை. கடமையைச் செய்ய முயன்றால் அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லாத நிலை உள்ளது.

கோவை பெரியார் அறிவுலகத்துக்கு நூல்கள் கொள்முதல் செய்த விவகாரத்தில் எந்த ஆட்சியில் தவறு நடந்திருந்தாலும், தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்தினால்தான் உண்மை நிலவரம் தெரியவரும்.

ஏனெனில், இந்த நூலகத்தைக் கட்டியது திமுக ஆட்சியில், திறந்தது தவெக ஆட்சியில். அவசர அவசரமாகத் திறந்தபோது அங்கு என்னென்ன புத்தகங்கள் இருந்தன, தவறான புத்தகங்கள் ஏதேனும் இருந்தனவா என்பதை ஆய்வு செய்த பிறகுதானே கட்டிடத்தைத் திறந்திருக்க வேண்டும்” என்று அவர் கூறினார்.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *