மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 16-ந்தேதி மாலை திறக்கப்பட்டது.
கார்த்திகை முதல் நாளான கடந்த 17-ந்தேதி முதல் வழக்கமான பூஜைகளும், நெய் அபிஷேகமும் தொடங்கின.
கோவில் நடை திறக்கப்பட்ட நாள் முதலே சபரிமலையில் பக்தர்கள் அதிகளவில் வர தொடங்கினர். கேரளம் மட்டுமின்றி தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் இருமுடி கட்டி சபரிமலைக்கு வருகின்றனர்.
இதனால் பம்பை, கோவில் சன்னிதானம், பதினெட்டாம் படி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்படுகிறது. ‘சுவாமியே சரணம் ஐயப்பா’ என்ற சரண கோஷம் காலை முதல் இரவு வரை கேட்டபடியே இருக்கிறது.
பக்தர்கள் கூட்ட நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாவதை தவிர்க்க தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 66 ஆயிரம் பேர், உடனடி முன்பதிவு மூலம் 14 ஆயிரம் பேர் என சாமி தரிசனம் செய்ய தினமும் 80 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் சபரிமலைக்கு 80 ஆயிரத்துக்கும் அதிகமாகவே பக்தர்கள் வருகிறார்கள்.
மண்டல பூஜை காலத்திற்கான ஆன்லைன் முன்பதிவு முடிந்துவிட்டது. இதனால் உடனடி முன்பதிவு மூலம் புக் செய்து சபரிமலைக்கு சென்றுவிடலாம் என்ற நம்பிக்கையில் அதிகளவில் ஐயப்ப பக்தர்கள் வருகின்றனர். ஆனால் அனுமதிக்கப்பட்ட அளவிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.
தற்போது தினமும் நிலக்கலில்லில் இருந்து 10 ஆயிரம் பேருக்கும், எரிமேலி மற்றும் வண்டிப் பெரியார் சத்திரத்தில் இருந்து தலா 2 ஆயிரம் பேருக்கு மட்டுமே உடனடி முன்பதிவு மூலமாக அனுமதி வழங்கப்படுகிறது. பாதுகாப்பு கருதி பம்பையில் உடனடி முன்பதிவு மையங்கள் செயல்படவில்லை.
இதனால் நிலக்கல், எரிமேலி, வண்டிப்பெரியார் சத்திரம் ஆகிய இடங்களில் செயல்படும் உடனடி முன்பதிவு மையங்களில் ஏராளமான பக்தர்கள் மணிக்கணக்கில் காத்து கிடக்க வேண்டிய நிலை நிலவுகிறது. இதனால் உடனடி முன்பதிவு எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சபரிமலைக்கு வரக்கூடிய பக்தர்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பக்தர்கள் பதினெட்டாம் படி ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு சுமார் 3 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இருந்தபோதிலும் ஐயப்பனை காணும் ஆர்வத்தில் சரணகோஷம் கூறிய படியே பக்தர்கள் வரிசையில் காத்து நின்று சாமி தரிசனம் செய்கிறார்கள்.
கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக பதினெட்டாம் படியில் நிமிடத்திற்கு சுமார் 75 பக்தர்கள் வீதம் ஏறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பக்தர்களை பதினெட்டாம் படியில் வேகமாக நகர்த்தும் பணியில் போலீசார் ஈடுபடுகின்றனர். மேலும் பாதுகாப்புப் பணிகளுக்காக கூடுதல் போலீசார் மற்றும் பேரிடர் மீட்புப் படையினர் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.
சாமி தரிசனத்துக்காக வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு சுக்கு தண்ணீர், குடிநீர் மற்றும் பிஸ்கட் ஆகியவை தடையின்றி வழங்கப்படுகின்றன.
மேலும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் தேவசம்போர்டு சார்பில் செய்யப்பட்டுள்ளன.
தினமும் அதிகாலை 3 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை என மொத்தம் 18 மணி நேரம் கோவில் நடை திறக்கப்பட்டு இருக்கிறது.
அந்த நேரத்தில் பக்தர்கள் தொடர்ந்து பதினெட்டாம் படி ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
பக்தர்களின் வசதிக்காக சன்னிதானம், பம்பை, நிலக்கல் மற்றும் பாரம்பரிய வனப்பாதைகளில் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவ மையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் ஆம்புலன்ஸ் வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
வரும் நாட்களில் வார இறுதி மற்றும் விடுமுறை நாட்கள் வருவதால், பக்தர்களின் எண்ணிக்கை மேலும் பல மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்கு தகுந்தாற்போல் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யப்பட்டுள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.