ஒப்பிலியப்பன் கோவிலில் இன்று பங்குனி பெருவிழா கொடியேற்றம்!!

சுவாமிமலை:
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் 108 திவ்ய தேச தலங்களில் ஒன்றாகும். இத்தலம் நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட கோவிலாகும்.

மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி பெருவிழா 12 நாட்கள் சிறப்பாக நடை பெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.


முன்னதாக உற்சவர் பூமாதேவி உடனாய பொன்னப்பர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினார்.

தொடர்ந்து, கொடி மரத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பட்டாட்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கருடாழ்வார் சின்னம் வரையப்பெற்ற கொடி ஏற்றப்பட்டது.


இதனை யொட்டி மூலவர் ஒப்பிலியப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று, அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது. விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் பெருமாள்-தாயார் எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெறும்.

விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகிற 25-ந்தேதியும், தொடர்ந்து, அஹோராத்ர புஷ்கரணியில் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், உற்சவர் திருமஞ்சனம், அன்னப் பெரும்படையல், புஷ்பயாகம், விடையாற்றி புறப்பாடுடன் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

SHARE ME:👇

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *